இந்த வார ராசி பலன் : 08-09-2023 முதல் 14-09-2023 வரை

post-img

சென்னை: செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் சிம்ம ராசியில் இருக்கிறார். செவ்வாய் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம ராசியில் இருக்கிறார். மேஷத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் கடகத்தில் அமர்ந்திருக்கிறார். கும்பத்தில் சனி... மேஷத்தில் ராகு... துலாத்தில் கேது... என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் கிரக மாற்றங்கள் எதுவும் இல்லை.


சந்திரன் இந்த வாரம் மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.

சூரியன் - சிம்ம ராசி
செவ்வாய் - கன்னி ராசி
புதன் - சிம்ம ராசி
குரு - மேஷ ராசி
சுக்கிரன் - கடக ராசி
சனி -கும்ப ராசி
ராகு - மேஷ ராசி
கேது - துலாம் ராசி


வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்ற புதுப்புது செயல்களில் ஈடுபடுவீர்கள். போட்டியாக இருந்த நபர்களை ஓவர் டேக் செய்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். சந்திர பகவானின் பூரண அனுக்கிரகம் உங்களுக்கு உள்ளது. அரசியல்வாதிகள் மிகுந்த செல்வாக்கு அடைவார்கள். கலைத்துறையினர் பெரும் புகழும் செல்வாக்கும் பெறுவார்கள். செவ்வாய் ஆறாம் இடத்தில் இருக்கிறார். வீண் வாக்குவாதங்களை விலை கொடுத்து வாங்க வேண்டாம். சொத்து பிரச்சனைகள் சாதகமாக முடியும். புதன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். அடுத்தவரின் ஆலோசனையை அதிகம் கேட்க வேண்டாம். பங்குச்சந்தை வியாபாரங்களில் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். குரு ஒன்றாம் வீட்டில் இருக்கிறார். திருமண காரியங்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது. வெளியூர் பயணங்களால் அதிக நன்மை அடைய முடியாது. சுக்கிரன் நான்காம் வீட்டில் இருக்கிறார். சுப காரிய நிகழ்ச்சிகள் தள்ளிப் போகும். பெண்களால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். சனி பகவான் பதினோராம் வீட்டில் இருக்கிறார். நில விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு கட்டுவதற்கான முயற்சியை தொடங்குவீர்கள். ராகு ராசியிலேயே அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் சலசலப்புகள் உண்டாகும். கேது ஏழாம் இடத்தில் இருக்கிறார். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.


கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கிறார். "இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா" கார் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஏக்கம் நிறைவேறும். சந்திரனின் நகர்வுகள் ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புதிய வேலை வாய்ப்புகள் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். செவ்வாய் ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல் உண்டாகும். இரவு நேர பயணங்களில் விழிப்பாக இருங்கள். புதன் நான்காம் வீட்டில் இருக்கிறார். எதிர்ப்புகளைத் தாண்டி சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். குரு பன்னிரண்டாம் வீட்டில் இருக்கிறார். வியாபாரத்தில் மள மளவென்று முன்னேற்றம் காண்பீர்கள். போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சுக்ரன் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். ஆடம்பரமான விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் வார்த்தையால் மற்றவரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். சனி பகவான் பத்தாம் இடத்தில் இருக்கிறார். தகப்பனாருக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ராகு 12ஆம் இடத்தில் இருக்கிறார். திடீர் பண வரவு உண்டாகும். கேது ஆறாம் வீட்டில் இருக்கிறார். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.


எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். உங்கள் முயற்சிகளுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுவார்கள். தவறான ஆலோசனையின் மூலம் நஷ்டம் ஏற்படுத்த பார்ப்பார்கள். அறிவுக் கூர்மையால் வெற்றி பெறுவீர்கள். சந்திர பகவானின் இடப்பெயர்ச்சி தொழில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாகும். வியாபாரம் சீராக நடக்கும். செவ்வாய் நான்காம் இடத்தில் இருக்கிறார். வாங்கிய நிலத்திற்கு பத்திரம் போடுவதில் இழுபறிநிலை உண்டாகும். பண விஷயத்தில் சிலர் உங்களை ஏமாற்ற நினைக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். புதன் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். குரு பகவான் பதினொன்றாம் வீட்டில் இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு இடம் மாற்றம் ஏற்படும். தனியார் துறையில் அக்கறையுடன் வேலை பார்க்க வேண்டும். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். கலைத்துறையினர் போராடி வெற்றி பெறுவார்கள். அலங்காரப் பொருட்களின் விற்பனை மிகுந்த லாபத்தை கொடுக்கும். சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். கோபத்தை குழி தோண்டி புதைத்து விடுங்கள். இல்லையென்றால் குடும்ப அமைதி கெட்டுப் போகும். ராகு 11ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியவர்களின் ஆசியால் நல்லது நடக்கும். கேது ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகளால் கல்வி செலவு அதிகரிக்கும்.
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...


சூரிய பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். விட்டதை பிடிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியோடு இரவு பகலாக பாடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சந்திரனின் நகர்வுகள் சில சங்கடங்களை தரலாம். இருப்பினும் அவற்றை எல்லாம் தாண்டி வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வீர்கள். கமிஷன் வியாபாரம் நல்ல பலனை கொடுக்கும். புதன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் புதிய புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். வேலை இடத்தில் மேல் அதிகாரிகளின் கோபத்தால் மனம் வருத்தப்படுவீர்கள். குரு பகவான் பத்தாம் வீட்டில் இருக்கிறார். நினைத்த காரியம் தடையின்றி நடக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். சுக்கிரன் முதலாம் வீட்டில் இருக்கிறார். எண்ணிய காரியங்கள் திண்ணியமாக நடக்கும். வாக்கு சாதுரியத்தால் புதிய அரசு ஒப்பந்தங்களை பெறுவீர்கள். சனி பகவான் எட்டாம் இடத்தில் இருக்கிறார். திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். கணவன் மனைவி உறவில் கசப்பு மேலோங்கும். ராகு பத்தாம் வீட்டில் இருக்கிறார். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு வியாபாரத்திற்கு தேவையான உதவி கிடைக்கும். கேது நான்காம் வீட்டில் இருக்கிறார். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.


அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
உங்கள் ராசிநாதன் முதலாம் வீட்டில் இருக்கிறார். வெட்டித்தனமாக பேசுவதை விலக்கிவிட்டு கெட்டிக்காரத்தனமாக தொழிலை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். எந்த வகையிலயாவது வியாபாரத்துக்கு இடையூறு ஏற்படலாம். சந்திரனின் சஞ்சாரம் நல்ல பலன்களை கொடுக்கும். கலைத்துறையினருக்கு புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். ஜவுளிக்கடை, உணவகத்தொழில் அமோகமாக நடக்கும். செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கண்ணை மூடிக்கொண்டு மண்ணில் காசை போடுங்கள். பல மடங்கு லாபத்தை கொடுக்கும். வீடு கட்டும் எண்ணம் இருந்தால் உடனே செயல்படுத்துங்கள். புதன் முதலாம் வீட்டில் இருக்கிறார். ஆடம்பரமாக செலவு செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். உங்கள் சொல்லுக்கு குடும்பத்திலும் வெளியிலும் மரியாதை கிடைக்கும். குரு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் தாமதம் உண்டாகும். சுக்கிரன் பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் குழப்பம் நிலவும் உறவினர்களால் சிக்கலை சந்திப்பீர்கள். சனி ஏழாம் வீட்டில் இருக்கிறார். எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீர்கள். ராகு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். ஆலய திருப்பணிகளுக்கு உதவி செய்கின்ற வாய்ப்பு உங்களுக்கு ஏற்படும். கேது மூன்றாம் வீட்டில் இருக்கிறார். துணிச்சலுடன் காரியத்தில் இறங்கி மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.


அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சூரியன் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறார். குறுக்கு வழியில் காரியம் பார்க்க நினைக்காதீர்கள். ஒரு ரூபாயை போட்டு பத்து ரூபாய் சம்பாதிக்கலாம் என்று சிலர் ஆசை காட்டுவார்கள். ஏமாந்து விடாதீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சிகளும் சாதகமான நிலையில் இல்லை. தொழிலில் கடுமையை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. செவ்வாய் முதலாம் வீட்டில் இருக்கிறார். மனதில் பட்டதை வெளியில் கொட்டி விடுவீர்கள். அதனால் உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாகும். புதன் பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். வேலை தேடியவர்களுக்கு நல்ல செய்தி வரும். குரு எட்டாம் வீட்டில் இருக்கிறார். தள்ளிப்போன திருமணங்கள் சொல்லி வைத்த மாதிரி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். சுக்கிரன் பதினொன்றாம் இடத்தில் இடத்தில் இருக்கிறார். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். முகநூல் பெண் நண்பர்களிடம் ரகசியங்களை வெளிப்படுத்தாதீர்கள். அது தேவையில்லாத அவமானத்தை கொண்டு வந்து சேர்க்கும். சனி ஆறாம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் லாபம் பெருகும் வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். ராகு எட்டாம் இடத்தில் இருக்கிறார். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. கேது இரண்டாம் இடத்தில் இருக்கிறார். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள்.


தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சூரியன் இருக்கிறார். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். கெட்டது செய்ய நினைப்பவர்கள் இந்த நேரத்தில் நல்லது செய்ய தூண்டப்படுவார்கள். சந்திரன் இடப்பெயர்ச்சி தொழிலில் ஏற்றத்தை கொண்டு வரும். புதிய கடைகள் திறப்பீர்கள். வியாபாரத்திற்கு தேவையான உதவி வெளியூரிலிருந்து கிடைக்கும். செவ்வாய் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும். சகோதர சகோதரிகள் வகையில் அனாவசியமான செலவுகள் ஏற்படும். புதன் பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார். எதையும் திட்டம் போட்டு செய்யுங்கள். நாம் நினைப்பது ஒன்றாக இருந்தாலும் நடப்பது வேறாக இருக்கும். குரு ஏழாம் வீட்டில் இருக்கிறார். விரோதிகள் வேரோடு அழிந்து போவார். விவசாய தொழிலில் மனம் ஈடுபடும். சுக்கிரன் பத்தாம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். சனி பகவான் ஆறாம் வீட்டில் இருக்கிறார். தாயார் வகையில் சில சிக்கல்களை சந்திக்க நேரும். தாய்மாமன் வீட்டு பிரச்சனையில் தலையிடாதீர்கள். ராகு ஏழாம் வீட்டில் இருக்கிறார். நீங்கள் நினைத்தது தான் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்காதீர்கள். மனைவி பிறந்து வீட்டிற்கு நடையை கட்டி விடுவார். கேது ராசியிலேயே அமர்ந்திருக்கிறார். ஓசியில் சாப்பிட ஒரு கூட்டம் உங்களைத் தேடி வரும். எச்சரிக்கையாக இருங்கள்.


போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
சூரியன் பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தொழிலுக்காக வங்கியில் கேட்ட கடன் தடையின்றி கிடைக்கும். அதன் மூலமாக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் விறுவிறுப்பாக காரியம் பார்ப்பார்கள். சந்திர பகவானின் இடப்பெயர்ச்சி நன்மை தீமை என இரு பலன்களை கொடுக்கும். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் இருந்த குறைகளை நுணுக்கமாக களைந்து எடுப்பீர்கள். பதினொன்றாம் ஏழாம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்களில் உங்களுக்குத் தான் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். அரசு தனியார் துறை ஊழியர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதன் பத்தாம் வீட்டில் இருக்கிறார். புதிய வேலைக்காக அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். வழக்கறிஞர்கள், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு இது பொற்காலம். குரு ஆறாம் வீட்டில் இருக்கிறார். பெரியவர்களின் வருகையால் வீட்டில் மங்கள நிகழ்சிகளுக்கான வழித்தடம் அமையும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். வாத திறமையால் சில சிக்கலான பிரச்சனைகள் இருந்து விடுபடுவீர்கள். சனி நான்காம் வீட்டில் இருக்கிறார். பிடிவாதகமாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டாகி மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும்.8,9,10 ஆம் தேதி சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.


வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...

சூரிய பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். திட்டமிட்டு செலவு செய்யுங்கள். இல்லையென்றால் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகும். தொழிலுக்காக வங்கியில் கடன் பெறுவீர்கள். சந்திரனின் நகர்வுகள் உங்களுக்கு ஏற்றமான பலன்களையே கொடுக்கும். இழுபரியாக இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். செவ்வாய் பத்தாம் வீட்டில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் பல மடங்கு லாபம் பார்ப்பீர்கள். கட்டுமான தொழில் சிறப்பாக நடக்கும். கொத்தனார், எலெக்ட்ரீசியன்கள் ஓய்வில்லாமல் உழைப்பார்கள். புதன் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். தொழிலுக்கு இருந்த இடையூறுகளை புத்திசாலித்தனமாக தகர்த்து எறிவீர்கள். நுணுக்கத்துடன் வியாபாரத்தை நடத்துவீர்கள். குரு ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தாயாருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். சகோதர சகோதர உறவுகள் நல்ல முறையில் இருக்கும். சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருக்கிறார். மனைவிக்கு தேவையான நகைகளை வாங்கி கொடுப்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை மனம் கோணாமல் பூர்த்தி செய்வீர்கள். சனி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு எந்த காரியமும் செய்ய வேண்டாம்.10,11,12 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.


வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
சூரியன் எட்டாம் இடத்தில் இருக்கிறார். உடலுக்கு சின்ன சின்ன வியாதி தொந்தரவுகள் ஏற்படலாம். உரிய முறையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக கடன் வாங்காதீர்கள். திருப்பி செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்கள். சந்திரனின் நகர்வுகள் தொழிலுக்கு உதவியாக இருக்கும். ஏற்ற இறக்கமாக வியாபாரம் நடந்தாலும். பண இறுக்கம் இருக்காது. அரசாங்க காரியங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். புதன் எட்டாம் வீட்டில் இருக்கிறார். துணிவுடன் சிந்தித்து செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வியாபார விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். குரு நான்காம் வீட்டில் இருக்கிறார். சகோதர சகோதரி வகையில் பண விரயம் உண்டாகும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகளை சரி செய்வீர்கள். சுக்ரன் ஏழாம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் களைகட்டும். உறவினர்களின் வருகையால் விருந்து நிகழ்ச்சிகள் அமோகமாக நடக்கும். சனி இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். கட்டுமான தொழில் சுணக்கமாக நடக்கும். இரும்பு உலோகம் சம்பந்தப்பட்ட வேலைகளில் கவனமாக இருங்கள். 11,12,13 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.


சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். விட்டுக்கொடுத்து போகின்றவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழியை மனதில் வைத்து குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபார ஸ்தலங்களில் யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சந்திரன் நகர்வுகள் சாதகமான பலன்களைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். ஐடி ஊழியர்கள் புதிய சாதனை படைப்பார்கள். செவ்வாய் எட்டாம் இடத்தில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமான பலன்களை கொடுக்கும். புதிய தொழில்களில் முதலீடு செய்வீர்கள். கூட்டுத்தொழில் நல்ல லாபத்தை தரும். புதன் ஏழாம் இடத்தில் இருக்கிறார். ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது நன்றாக படித்துப் பாருங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் சிரமத்தை எதிர் நோக்குவீர்கள். வரவுக்கு மேல் செலவுகள் அதிகரிக்கும். குரு நான்காம் இடத்தில் இருக்கிறார். வழக்கறிஞர்கள் வாத திறமையால் புகழடைவார்கள். மருத்துவர்கள் அரசாங்கத்தால் பாராட்டப்படுவார்கள். சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் ஆடம்பர விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நிலம் பத்திரப்பதிவு செய்வீர்கள். சனி ஒன்றாம் வீட்டில் இருக்கிறார். வாகனங்களில் பழுது ஏற்படலாம். வீட்டில் மராமத்து வேலை பார்ப்பீர்கள். தோப்பு குத்தகை மூலமாக பண வரவு அதிகரிக்கும். ராகு மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அரசியல்வாதிகளின் பழக்கத்தால் ஆதாயம் அடைவீர்கள். கேது ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். 13,14 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.


பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே....
சூரியன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பந்தயக்குதிரைகளைப் போல் பரபரப்பாக செயல்படுவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தியை பெருக்குவீர்கள். தனியார் துறை ஊழியர்களும் திறமையை காட்டி முதலாளிகளின் பாராட்டை பெறுவார்கள். சந்திரன் இடப்பெயர்ச்சி புதிய தொழிலுக்கு உத்வேகம் கொடுக்கும். வெளி வட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். செவ்வாய் ஏழாம் வீட்டில் இருக்கிறார். விடாத முயற்சியால் வியாபாரத்தில் முதலிடத்தை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புதன் ஆறாம் வீட்டில் இருக்கிறார். புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சகோதரியின் திருமணத்தை முன் நின்று நடத்துவீர்கள். தாய் தந்தையர் ஆசைப்பட்டதை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். குரு இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சிலருக்கு நல்லது செய்வீர்கள். ஆனால் அந்த நன்றியை அவர்கள் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். கலை துறையினர் சில போராட்டங்களை சந்திப்பார்கள். அரசியல்வாதிகள் அவதூறுகளை சுமக்க வேண்டியது நிலை உருவாகும். சனி பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறார். இரும்பு உலோகப் பொருள் வியாபாரம் அமோகமான லாபத்தை கொடுக்கும். உணவகத் தொழில் சிறப்பாக நடக்கும். ராகு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். கேது எட்டாம் இடத்தில் இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள்.

 

Related Post