கொரோனா 'நெகட்டிவ்'- ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா புறப்பட்டார் joe biden

post-img

வாஷிங்டன்: இந்தியாவின் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் (ஜோ பிடன்) புறப்பட்டார். முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஜோ பைடனுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.


டெல்லியில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ட்ரூடோ, ஜெர்மன் அதிபர் ஒலாஃப், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.


ஜி 20 உச்சி மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பதால் அதி உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு கடந்த வாரம் திடீரென கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் ஜோ பைடன், டெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதனால் ஜோ பைடனின் இந்திய பயணமும் உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து வாஷிங்டனில் இருந்து இந்தியாவுக்கு அதிபர் ஜோ பைடன் புறப்பட்டார். இன்று மாலை இந்திய பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கிறார்.

 

Related Post