மத்திய அரசு நாட்டின் பணவீக்க பிரச்சனைகளை சமாளிக்கவும், மக்களின் விலைவாசி சுமையை குறைக்கவும் பல மாதங்களாக குறைக்காப்படாமல் இருந்து வீட்டில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்தது. இதை தொடர்ந்து 2 நாளில் வர்த்தக சிலிண்டரின் விலையை 158 ரூபாய் குறைத்துள்ளது.
இது எரிவாயு நிறுவனங்களுக்கு பெரும் சுமையை உருவாக்கும் என்பதை உணர்ந்த மத்திய அரசு உள்நாட்டு எல்பிஜி எரிவாயு மீதான இறக்குமதி வரி மற்றும் விவசாய மற்றும் இன்ஃப்ரா செஸ் ஆகியவற்றை மத்திய அரசு 15 சதவீதத்தில் இருந்து 0 சதவீதமாக குறைத்துள்ளது.
பொதுவாக தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் எல்பிஜி-க்கு 15% இறக்குமதி வரியும், 15% வேளாண் மற்றும் உள்கட்டமைப்பு வரியும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை அறிவிப்பு தெரிவித்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களுக்கான அடிப்படை சுங்க வரியை 5% இல் இருந்து 15% ஆக அரசாங்கம் உயர்த்தியது. எல்பிஜி சிலிண்டர்களின் இறக்குமதிக்கு 15% விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) விதித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் இறக்குமதிக்கு இந்த அடிப்படை சுங்க வரி உயர்வு பொருந்தாது. இதனால் இந்த வரி உயர்வு சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.
இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள ஜீரோ சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) எரிவாயுவை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. மேலும அரசு நிறுவனங்கள் மீதான விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) வரி நீக்கப்பட்டு உள்ளது மூலம் நடுத்தர மக்கள் பலன் அடைவார்கள்.
இந்த வார தொடக்கத்தில், அனைத்து உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.200 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் புதிய வரிக் குறைப்பு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கு நிதி சுமையை குறைக்கும்.
எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சுமார் 22,100 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது, இது மார்ச் காலாண்டில் 20,800 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருடம் இதே ஜூன் காலாண்டில் 18,500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்தது மூலம் இந்திய மக்கள் வருடத்திற்கு சுமார் 18,500 கோடி ரூபாய் பணத்தை சேமிக்க முடியும். மத்திய அரசு 2022-23 ஆம் ஆண்டு எரிவாயு விலையை அதிகரிக்க கூடாது என்பதாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 20000 கோடி ரூபாய் ஒருமுறை நிதியுதவியை அளித்தது.