ஹரியானா- தீவிரமடையும் போராட்டம்! தேசிய நெடுஞ்சாலை முற்றுகை

post-img

ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஒரு குவிண்டால் விதைகளை அரசு ரூ.6,400க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் வந்திருந்தது.

இந்நிலையில், கோரிக்கை தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இதை பரிசீலிப்பதாக அரசு கூறியிருந்தது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று, டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது மாநிலம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்திற்கு முன்னர் கடந்த 6ம் தேதி, ஹரியானவையும், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தன. இது குறித்து பேசிய விவசாய சங்க தலைவர்கள், "நாங்கள் இந்த விவசாயத்தை நம்பிதான் வாழ்ந்து வருகிறோம். சூரியகாந்திதான் இங்கு பணப்பயிர். ஆனால் இந்த பூவின் விதைகளை அரசு கொள்முதல் செய்ய மறுக்கிறது. அரசு கொள்முதல் செய்தால் ரூ.6,400க்கு வாங்க வேண்டும். ஆனால் கொள்முதல் செய்ய மறுப்பதால் தற்போது நாங்கள் தனியார் விற்பனை நிறுவனங்களை நோக்கி தள்ளப்படுகிறோம். தனியாரிடம் ஒரு குவிண்டால் வெறும் ரூ.4,000க்குதான் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

எனவேதான் நாங்கள் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனால் எங்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகளில் வயதானோர், இணை நோய் உள்ளவர்கள் என பலர் இருக்கின்றனர். இவர்கள் மீது இந்த அரசு இப்படி தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதற்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்" என்று கூறியிருந்தனர்.

Farmers protest by blocking national highway in Haryana demanding procurement of sunflower seeds at minimum support price

இந்நிலையில், இதனைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதி மகாபஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. அதில், தங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் உறுதியாக தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று, குருக்ஷேத்ரா மாவட்டத்தில் பிப்லி அருகே உள்ள மேம்பாலத்தில் விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை கொண்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Related Post