ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்தது; சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பான சர்ச்சையில் நடிகர் அல்லு அர்ஜூன் இன்று ஹைதராபாத் போலீஸ் முன்பாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
செம்மரக் கட்டை கடத்தலையும் அரசியலையும் மையமாகக் கொண்டதாக புஷ்பா-2 திரைப்படம் அண்மையில் வெளியானது. இத்திரைப்படம் ரூ1500 கோடிக்கும் அதிகமான வசூலைத் தாண்டி இருக்கிறது.
புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு வெளியீட்டு நிகழ்வு கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்; சிறுவன் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இச்சம்பவத்துக்காக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் உடனடியாக ஜாமீனில் விடுதலையானார். அப்போது ஒட்டுமொத்த தெலுங்கு திரை உலகமும் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக நின்றது; திரை உலக பிரபலங்கள் வரிசையாக அல்லு அர்ஜூன் வீட்டுக்கே படையெடுத்து சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தெலுங்கானா சட்டசபையில் அல்லு அர்ஜூனாவை கடுமையாகவும் விமர்சித்தார் ரேவந்த் ரெட்டி. இதற்கு அல்லு அர்ஜூனாவும் பதிலடி தந்திருந்தார். இந்த நிலையில் அல்லு அர்ஜூன் வீடு மீது உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட உடனேயே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அதுவும் சர்ச்சையானது. அதுவும் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர், முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் இருக்க்ம் போட்டோ வெளியாகி பிரளயத்தை கிளப்பிவிட்டது.
தற்போது அடுத்த அத்தியாயமாக, அல்லு அர்ஜூனை இன்று விசாரணைக்கு ஆஜராக பொலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். முன்னதாக போலீசார் அறிவுறுத்தலையும் மீறி அல்லு அர்ஜூன் திரையரங்குக்கு சென்றது; ரசிகர் இறந்த பின்னரும் திரையரங்கிலேயே 2 மணிநேரம் இருந்தது உள்ளிட்ட வீடியோ பதிவுகளை ஹைதராபாத் போலீசார் வெளியிட்டிருந்தனர். அல்லு அர்ஜூன், சிறப்பு வெளியீட்டு நிகழ்ச்சி நடந்த திரையரங்க உரிமையாளர் உள்ளிட்டோரும் இன்றைய விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.