ஹைதராபாத்: புஷ்பா 2 பட ரிலீஸின் போது சந்தியா தியேட்டரில் அல்லு அர்ஜுன் வந்த போது மிகப் பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் ஒருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டார். இதற்கிடையே கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்துத் தெரிவித்த போது, அல்லு அர்ஜுன் அப்போ படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என அலட்சியமாகக் கூறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த புஷ்பா 2 மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி உலகெங்கும் வெளியானது.
அப்போது ஹைதராபாத்தில் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதன்படி புஷ்பா 2 சிறப்புக் காட்சிகளைத் திரையிட்ட சந்தியா தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்றார். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எந்தவொரு அனுமதியும் இல்லாமல் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே மஜ்லீஸ் கட்சியின் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசியும் நடிகர் அல்லு அர்ஜுன் மீது சில பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அல்லு அர்ஜுனின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அக்பருதீந் ஓவைசி, நடிகர் அல்லு அர்ஜுன் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாகவும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாகத் தெலுங்கானா சட்டசபையில் பேசிய ஒவைசி, பல்வேறு குற்றச்சாட்டுகளை அல்லு அர்ஜுன் மீது முன்வைத்தார். தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த பிறகும், அல்லு அர்ஜுன் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் வெளியே கிளம்பும் போதும் கூட கார் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கை அசைத்ததாகவும் ஒவைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தியேட்டரில் ஏற்பட்ட திடீர் நெரிசல் குறித்தும் இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் அல்லு அர்ஜுனிடம் கூறப்பட்டுள்ளது.. ஆனால், உயிரிழப்பு குறித்துக் கவலைப்படாமல் அல்லு அர்ஜுன், அப்போ படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று பொறுப்பே இல்லாமல் கூறியதாக எனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.
தியேட்டருக்கு வெளியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. மிகப் பெரியளவில் நெரிசல் ஏற்பட்டது. ஆனால், அப்போதும் அல்லு அர்ஜுன் பொறுமையாகப் படம் பார்த்துவிட்டே கிளம்பினார். அப்போதும் கூட கிளம்பும் போது திடீரென கார் மீது ஏறி மக்கள் கூட்டத்தை நோக்கி கை அசைத்தார். நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கு என்ன ஆனது என்று கூட அவர் கேட்கவில்லை. நானும் தான் பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கிறேன். ஆனால், இதுபோன்ற கூட்ட நெரிசல்கள் ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வேன்" என்றார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் டிசம்பர் 13ம் தேதி அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். கீழமை நீதிமன்றம் அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட போதிலும், அதே நாளில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், ஜாமீன் உத்தரவு நகல்களைப் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் அல்லு அர்ஜுன் ஒரு நாள் சிறையிலேயே இருக்க வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.