திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களில் கொட்டப்பட்ட கேரளா மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் நேற்று அகற்றப்பட்டு 18 லாரிகளில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன. இந்த மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது. கேரளா மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதற்கு உடந்தையாக இருந்த 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி, நடுக்கல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், தனியார் தோட்டங்களில் கேரளா மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்தன. இதேபோல பெரும் எண்ணிக்கையிலான கழிவுகள் கடந்த 17-ந் தேதி லாரிகளில் வந்து கொட்டப்பட்டன. இது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கேரளா நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டு இடங்களை காட்டிக் கொடுத்ததாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே மருத்துவக் கழிவுகள் விவகாரத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கேரளா அதிகாரிகள் நேரில் வந்து தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்கு அகற்றிச் செல்ல வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.
இதனடிப்படையில் கேரளா அதிகாரிகள் நெல்லைக்கு வந்து முகாமிட்டனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்திய அதிகாரிகள் நேற்று காலை முதல் கழிவுகளை அகற்றத் தொடங்கினர். இதற்காக கேரளாவில் இருந்து 18 லாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை வரை மொத்தம் 18 லாரிகளில் இந்த கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழ்நாடு எல்லையான புளியரை சோதனைச் சாவடி வரை இந்த லாரிகளை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். இன்று 2-வது நாளாகவும் கேரளா மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட உள்ளன.
இது தொடர்பாக கேரளா அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் இருந்து 70 அதிகாரிகள் முகாமிட்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டோம். தமிழ்நாடு அரசு தரப்பில் முழுமையான ஒத்துழைப்பு தரப்பட்டது என்றனர்.