முதலில் பைக், அடுத்து லாரி.. கன்னியாகுமரி அருகே வாகன சோதனை நடத்திய போலீசாருக்கே பெரும் சோதனை

post-img
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் விஜில் எட்வின் தாஸ் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் மீது வாகனத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் எல்லா ஊரிலும் வாகன சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான். பகலில் போக்குவரத்து போலீசார் தலைகவசம் அணியாதவர்கள், சரியான ஆவணங்கள் இல்லாமல் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக செல்பவர்கள் போன்ற விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள். இதேபோல் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், கார்களில், ஆட்டோக்களில் விதிகளை மீறி சென்றால், பெரிய வாகனங்களில் அதிக எடை இருந்தால் அல்லது முறையான ஆவணங்கள் இல்லை என்றால் பிடித்து அபராதம் விதிப்பார்கள். ஆனால் இரவில் சட்டம் ஒழுங்கு போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். இவர்கள் மதுபோதையில் செல்வோர், பழைய குற்றவாளிகள், திருட்டு வாகனங்களில் செல்வோர், சந்தேகத்திற்கு இடமான வகையில் செல்வோர், குற்ற செயல்களை செய்வோர் ஆகியோரை பிடிக்கும் வகையில் வாகன சோதனை நடத்துவார்கள். இந்த சோதனையில் இருந்த தப்பிக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது வழக்கம். வழக்கமான போக்குவரத்து சோதனையில் தப்பிப்பது போல்தப்பி ஓடிவிட முடியாது. கண்டிப்பாக யார்,எங்கிருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் என்ன வேலை என்பதை தெரிவித்தாக வேண்டும். வாகனங்களில் ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். மது போதையில் இருக்கக்கூடாது. இதில் எதாவது ஒரு பிரச்சனை என்றாலும் நிச்சயம் சிக்கல் தான். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் விஜில் எட்வின் தாஸ் (வயது53) தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் விஜில் எட்வின் தாஸ் வாகனத்தை நிறுத்துமாறு செய்கை காட்டினார். ஆனால் அந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் அவர் மீது மோதிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தபடி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் கீழே விழுந்து காயமடைந்தார். அவரை சக போலீசார் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலர் மீது லாரி: இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. புலியூர்குறிச்சியில் அந்த லாரியை ஜஸ்டின் சந்திரன் (49) என்ற போலீஸ்காரர் நிறுத்துமாறு கூறியிருக்கிறார்கள் ஆனால் வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த ஜஸ்டின் சந்திரனின் கால் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது கால் உடைந்தது. அவரை சக போலீசார் மீட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கைது: இதற்கிடையே டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிசெல்ல முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் சிவந்த குளத்தை சேர்ந்த லாட்டன் துரை (52) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்காணிப்பு கேமரா: இதற்கிடையே வாகன சோதனை மேற்கொண்ட போலீசார் மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதிய தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற இளைஞர்களை பிடிக்க அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மூலம் நடத்திய விசாரணையில் அது தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபம், குமரன்குடிவிளையை சேர்ந்த ரோகித் குமார் (22) என்பருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதிகாலையில் சிக்கிய இளைஞர்கள்: இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்த ரோகித்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஆன்சில் (26), கைசாலவிளையை சேர்ந்த நிகேஷ் (23) ஆகியோரையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அந்த 3 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். வாகன சோதனையில் என்ன செய்ய வேண்டும்: இரவில் வாகன சோதனையின் போது போலீசார் வாகனத்தை நிறுத்தினால், தாராளமாக வாகனத்தை நிறுத்துங்கள். தலைகவசம் அணியவில்லை என்றாலும், 3 பேராகவந்தாலும் சிக்கல் பெரிய அளவில் இருக்காது. முடிந்தவரை எச்சரித்து அனுப்புவார்கள். அதிகபட்சம் சிறிய அளவில் அபராதம் மட்டுமே விதிப்பார்கள். மதுபோதையில் வந்தால் அல்லது வாகனங்களில் ஆவணங்கள் இல்லை என்றால் தான் சிக்கல். போலீசாரின் சோதனைக்கு பயந்து,அவர்களை தள்ளிவிட்டு செல்வது, அல்லது நிறுத்தாமல் தப்பி ஓடுவது பெரிய சிக்கலாக முடியும்.

Related Post