சென்னை: அமித்ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தான் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் பா.ரஞ்சித்தும் கண்டித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு தொடர்பாக பா.ரஞ்சித்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பதிலளிக்கையில், அமித்ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தான்.
அதனால் எந்த சக்தி நினைத்தாலும் அம்பேத்கரை தடுக்கவும் முடியாது. மீறவும் முடியாது. பாபா சாஹேப் அம்பேத்கருக்கு ஜெய்பீம் என ரஞ்சித் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் , அம்பேத்கர், பெரியார் ஆதரவாளர். அவர்களுடைய கருத்துகளை பின்பற்றுபவர். நிறைய விவகாரங்களில் மத்திய அரசை பா.ரஞ்சித் கண்டித்துள்ளார். அது போல் ஆம்ஸ்ட்ராங் கொலையான விவகாரத்தில் தமிழக அரசையும் கண்டித்துள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய போது , "எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என சொல்வது இப்போது பேஷனாகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால் உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்" என பேசியிருந்தது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதிலும் அம்பேத்கரை இழிவுப்படுத்தியது எந்த வகையில் நியாயம் என கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினர் ஜெய் பீம், ஜெய் பீம் என முழக்கமிட்டதால் அவையை தொடர்ந்து நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமித்ஷாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தில் கூறியதாவது: எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்" என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.
அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்! என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, நான் அம்பேத்கரை பற்றி பேசியது திரித்து பரப்பப்படுகிறது. எனது பேச்சை காங்கிரஸ் கட்சி திரித்துள்ளது. இவ்வாறு அமித்ஷா விளக்கமளித்திருந்தார். எனினும் அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் அம்பேத்கர் புகைப்படத்தை ஏந்தி ஊர்வலமாகவும் வருகிறார்கள்.