அதிமுக தன்மானத்தோடு முடிவை எடுத்து இருக்கிறது.. திமுக கூட்டணியில் பாதிப்பா? திருமாவளவ

post-img

சென்னை: பாஜகவுடனான கூட்டணி முறித்துக்கொள்ளப்படுவதாக ஜெயக்குமார் அறிவித்த நிலையில், அதிமுக தன்மானத்தோடு முடிவு எடுத்திருக்கிறது என்றும், இதனால் திமுக கூட்டணியில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.


முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து அதிமுக தலைவர்களை கொந்தளிக்க செய்தது. அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை மீண்டும் அதிமுக முன்னாள் தலைவர்களை வசை பாடினார். இது மீண்டும் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், "பாஜகவுடன் கூட்டணி இல்லை. இதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அதிரடியாக அறிவித்தார். பாஜகவுடனான கூட்டணியை தற்போதைக்கு முறித்துக் கொண்டதாக அதிமுக அறிவித்துள்ளது.


இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல் திருமாவளவன், இது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசியதவாது:- அண்ணாமலை அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிரும் புதிருமாக அல்லது கடுமையான முரண்பாடாக பேசி வருகிறார். கூட்டணியின் நல்லிணக்கத்திற்கு எதிராக அவரது பேச்சு, நடவடிக்கைகள் என அனைத்தும் இருக்கின்றன.

 

இவ்வளவு பேசிய பிறகும் அதிமுகவினர் இந்த கூட்டணியில் நீடிக்கலாமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஜெயக்குமார் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள கருத்து அல்லது அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பேரறிஞர் அண்ணா அவர்களை அண்ணாதுரை என்று அழைப்பதும், பெயரை சொல்லி அழைப்பது மட்டுமல்ல. அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைத்து வேண்டும் என்றே அழைப்பது, அவரை மதுரையில் வைத்தே தாக்க நினைத்தார்கள், அவர் மதுரையிலே பதுங்கி இருந்தார் அவர் தப்பித்தார் என்று எல்லாம் சொல்வது மிகுந்த அவமதிப்பாகும்.


இந்த சூழலில் அதிமுக தன்மானத்தோடு ஒரு முடிவை எடுத்திருக்கிறது என்று கருதுகிறேன். இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருந்தால் கட்டாயம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு இருக்கும். அல்லது பாஜக கட்சியின் தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்று இருந்தால் பிறகு சமரசம் என்ற நிலைக்கு போக வாய்ப்பு இருக்கிறது. மறுபடியும் அதிமுக பாஜக கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்கிறது.


எனவே இது பாஜக கட்சியின் தலைமையின் கவனத்தை ஈர்க்க இப்படி சொல்லப்படதா அல்லது அதிமுகவின் தன்மானத்தை தக்க வைப்பதற்காக, பாதுகாப்பதற்காக இப்படி பேசப்பட்டதா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு திருமாவளவன் கூறினார். அதிமுக பாஜக கூட்டணி பிளவால், திமுகவில் கூட்டணி வகிப்பவர்கள் அதிமுகவில் இணைவதற்கான சூழல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு

பதிலளித்த தொல் திருமாவளவன் கூறியதாவது:-
"இதற்கான சூழல் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே இந்தியா கூட்டணி என்ற ஒரு வலுவான கூட்டணி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த சூழல் ஏற்படாது. அதிமுக தனித்து நிற்குமேயானால் அதன் வாக்கு வங்கி தக்கவைக்கப்படும். பாஜகவுடன் தொடர்ந்து பயணித்தார்கள் என்றால் படிப்படியாக அதன் வாக்கு வங்கியை இழக்க நேரிடும். எனவே தற்போதைய நிலை அதிமுகவின் வாக்கு வங்கிக்கு பெரிதும் பயன்படும்.


எனவே அதிமுகவின் எதிர்காலமும் பாதுகாப்பான நிலையில் இருக்கும். இல்லையேல், பாஜகவை அதிமுக தூக்கி சுமந்தால் சட்டமன்ற தேர்தலில் எதிர்கொண்ட அதே நெருக்கடியை நாடாளுமன்ற தேர்தலிலும் சந்திக்க நேரிடும். குறிப்பாக நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிமுக தூக்கி சுமப்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய சுமை.. இதனால், மிக அதிக தொகுதிகளை பங்கீடு செய்ய வேண்டியிருக்கும். தமிழக மக்களின் நம்பிக்கையும் குறையும். எனவே இந்த நேரத்தில் நல்ல முடிவை அதிமுகவினர் எடுத்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

 

Related Post