செங்கல்பட்டு: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், லாட்டரி டிக்கெட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், "அரசியலில் புதிது புதிதாக வருவார்கள். எவ்வளவோ பேரை பார்த்துவிட்டோம். அதற்கெல்லாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. காலம் அதற்கு பதில் சொல்லும். நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது லாட்டரி டிக்கெட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அது சிலருக்கு புரியும். சிலருக்கு புரியாது.
மற்ற மாநில அரசியல் நிலவரங்களைப் பார்த்து எப்படியாவது இங்கு தஞ்சமடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் அரசியல் இங்கு வேகாது என்பதை அழுத்தமாக சொல்லிக் கொள்கிறேன். உதயநிதி என்ற மகத்தான தலைவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறோம். 100 ஆண்டு காலத்துக்கு மேல் வாழ்ந்து அவர் இந்த இயக்கத்தையும், நம்மையும் வழிநடத்துமாறு வாழ்த்துகிறேன்.
சமீபத்தில் பெஞ்சல் புயலால் மழை வெள்ளம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் மழை பெய்தால் அந்த தண்ணீர் வெளியேற ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஆகும். இந்தமுறை மழை கடுமையாக பெய்தும், 12 மணி நேரத்திலேயே மழை நீர் வடிந்துவிட்டது. அதுதான் திமுக ஆட்சி. உரிய முன்னேற்பாடுகளை செய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காத நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.
அதிமுக கட்சிக்காரர்கள், பாஜக கட்சிக்காரர்கள் நடிகர் கட்சிக்காரர்கள் என்று எல்லோரும் இறங்கிவிட்டனர். எங்காவது அரை அடி தண்ணீரில் சென்று நின்று கொண்டு, கீழே கேமரா வைத்துக் கொண்டு பார்த்தீர்களா எப்படி தண்ணீர் நிற்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு வருடத்துக்கான மழை ஒரு நாளில் பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்.
இப்போது பெய்யும் மழை எல்லாம் பெரிதாக என் உயரத்துக்கு பெய்கிறது. மழை நீர் வடிகால் சரியாக அமைக்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் மேலே தான் செல்லும். வடிகாலுக்குள்ளா செல்லும். இது சாதாரண புயல் இல்லை. இப்படிப்பட்ட புயலை நாங்கள் பார்த்தது இல்லை. நல்லவேளை செங்கல்பட்டு மாவட்டத்தில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தயாராக இருந்தோம். ஆனால் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வழியாக சென்றுவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 60 செ.மீ மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் தண்ணீரில் நின்று கொண்டு ஆட்சியை விமர்சனம் செய்கிறார்கள்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் இதுபோன்ற மழை வெள்ளத்தை சமாளிப்பது கடினம். புயல், மழை, வெள்ளம், கொரோனா என எதுவாக இருந்தாலும் மக்களுக்காக உழைப்பது தான் அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை. அதை எல்லா காலத்திலும் சரியாக செய்யும் ஒரே கட்சி திமுக மட்டும் தான்." என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage