கடவுளிடம் வரம் கேட்டால் நான் என்ன கேட்பேன் தெரியுமா? மக்கள் சந்திப்பு பயணத்தில் ராமதாஸ்

post-img

கடலூர்: கடவுள் நேரில் வந்து தன்னிடம் வரம் கேட்கும்படி கூறினால் இரண்டே இரண்டு வரம் மட்டும் கேட்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பத்தில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்ட அவர் அங்கு மேடையின்றி, ஆடம்பரமின்றி எளியமையாக திண்ணைப் பிரச்சாரம் செய்த போது இதனைக் கூறினார்.
40 ஆண்டுகளுக்கு முன் எப்படி எளிமையாகச் சென்று ராமதாஸ் மக்களை சந்தித்தாரோ, அதே போல் மீண்டும் மக்களைச் சந்திக்க பயணம் புறப்பட்டிருக்கிறார். திண்ணைப் பரப்புரை முறையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்காக ராமதாஸ் விதித்துள்ள முதல் கட்டுப்பாடு, கூட்டம் மிகவும் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
மேலும், கூட்டத்திற்காக மேடை அமைக்கப்படக் கூடாது என்றும் தரையில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் மட்டுமே போடப்பட வேண்டும். எனவும் கட்டுப்பாடு விதித்துள்ள ராமதாஸ் நிர்வாகிகளுக்கு செலவை மிச்சப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதேபோல் கூட்டத்திற்காக தன்னை வரவேற்று பதாகைகளோ, சுவரொட்டிகளோ ஒட்டக் கூடாது என்பது ராமதாஸ் விதித்துள்ள இன்னொரு கட்டுப்பாடாகும்.


மக்கள் சந்திப்பு பயணத்தின் முதல் நிகழ்வாக கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பத்திற்கு சென்ற ராமதாஸ், கடவுள் நேரில் வந்து தன்னிடம் வரம் கேட்கும்படி கூறினால் இரண்டே இரண்டு வரம் மட்டும் கேட்பேன் என்றார். அந்த 2 வரங்கள் என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது என்பதும், ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாக கடலில் கலக்கக் கூடாது என்பதும் தான் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மதுவே இருக்கக் கூடாது என்பது தான் கடவுளிடம் தாம் கேட்கும் முதல் வரம் என்றவர் தமிழ்நாட்டில் மதுவை முற்றிலும் ஒழித்து மதுவிலக்கு கொண்டு வர பாமக ஓயாமல் போராடி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். ராமதாஸ் மேற்கொள்ளும் இந்த மக்கள் சந்திப்பு பயணம் பாமகவுக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் புத்தெழுச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது.

 

Related Post