பாரத் பெயர் மாற்றத்துக்கு பின் மத ரீதியான 3-வது உலகப் போருக்கு தயாராகும்

post-img

சென்னை: மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அழித்து ஒழித்து குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டும்; இந்தியாவை 3-வது உலகப் போருக்கு தயார்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம், குலத் தொழில் முறையை ஊக்குவிக்கிறது; இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு. இதனை வலியுறுத்தி சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசியதாவது: "இந்தியா" கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதில் இருந்து பிரதமர் மோடி நிலை தடுமாறுகிறார். இப்போது நாட்டின் பெயர் இந்தியா என்பதை பாரத் என மாற்றுகின்றனர். 2016-ல் பாரத் என பெயர் வைக்க உச்சநீதிமன்றத்தில் எதிர்த்ததும் இதே பாஜக அரசுதான்.


அகண்ட பாரதம்: இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுவது ஒரு பெயர் மாற்றம் அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அஜெண்டாவை நிறைவேற்றுவதற்கான ஒரு தொடக்கம் இந்த பெயர் மாற்றம். அவர்கள் அகண்ட பாரத்தை நோக்கிச் செல்கின்றனர். அதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் திட்டம்.


3-வது உலகப் போருக்கு தயாராகும் இந்தியா: அதாவது மத ரீதியாக 3-வது உலகப் போருக்கு இந்தியாவை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


முதல் உலகப் போரை ஹிட்லர் முடுக்கிவிட்டான். கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தான். அவனது முடிவு என்னானது என்பது உலகம் அறியும். அதைப் போல இன்று இந்தியாவுடன் பாகிஸ்தானை, சீனாவை, இலங்கையை இன்ன பிற நாடுகளை இணைத்து அகன்ற பாரதம் அமைப்போம்; அதுதான் உண்மையான இந்தியா. அதுதான் உண்மையான பாரதம். இதுதான் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா. இந்த அஜெண்டாவை நிறைவேற்ற நிறைய முட்டாள்கள் தேவை.



ஆர்.எஸ்.எஸ். அழிக்கப்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். அது குழிதோண்டி புதைக்கப்பட வேண்டும். அதுவரையில் இந்த போராட்டம் தொடரும். 2024-ம் ஆண்டு மட்டுமல்ல அதற்குப் பிறகும் இத்தகைய போராட்டங்கள் தொடரும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருக்கிற வரையில் இந்த நாடு அமைதியாக இருக்காது. அமைதியாக இருக்க முடியாது. மத கலவரங்களும், ஜாதிய கலவரங்களும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கும். அதன் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதாயம் அடைகிறது.


குஜராத் டூ ஹரியானா: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பயன்படுத்தி குஜராத்தில் ஆதாயம் அடைந்தனர். இப்போது மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அடுத்தது ஹரியானா எரியத் தொடங்கி இருக்கிறது. இப்படி நாடு முழுவதும் மத ரீதியாக மக்களை மோதச் செய்து ஜாதிய ரீதியாக மோதச் செய்து தங்களது குறுகிய அற்பத்தனமான அரசியலை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கும் அதன் அரசியல் அமைப்பான பாஜகவும் முயற்சிக்கின்றன. இந்த அபாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


உதயநிதி ஸ்டாலின்: ஆர்.எஸ்.எஸ். பாஜகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அப்படி நம்பிக்கை வைத்திருந்தால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்லி இருக்க வேண்டும். அதற்கு மாறாக, தலையை கொண்டு வா ரூ10 கோடி தருகிறேன் என்கிறார்கள். காந்திய கருத்தில் மாறுபாடு இருந்தால் மாற்று கருத்தை சொல்ல வேண்டும். அதற்கு மாறாக சுட்டுக் கொலை செய்தனர். ஏனெனில் ஜனநாயகம், விவாதங்களின் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்படி நம்பிக்கை இருந்திருந்தால் நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்திருப்பார். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

 

Related Post