உலக தடகள சாம்பியன்ஷிப்..தங்கம் வென்று புதிய வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா!

post-img

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சார்பாக 2 பதக்கங்களே வெல்லப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இவர் மட்டுமல்லாமல் இந்தியாவின் கிஷோன் ஜீனா மற்றும் டிபி மனு ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதனால் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பதக்கம் கிடைக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது முயற்சியிலேயே 88.17 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இவருக்கு பின் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரத்திற்கு வீசினார்கள். தொடர்ந்து செக் குரியரசின் ஜேக்கர் வேட்லெச் 86.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். 2வது முயற்சி முதல் கடைசி முயற்சி வரையிலும் இந்தியாவின் நீரஜ் சோப்ராவே முன்னிலையில் இருந்தார்.

இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்களில் யாரும் தங்கம் வென்றதே இல்லை. அதனை மாற்றி, ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் நீரஜ் சோப்ரா.

காமன்வெல்த், ஆசியப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள், டைமண்ட் லீக் போட்டிகள் என்று நீரஜ் சோப்ரா அத்தனை தொடர்களிலும் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வென்று சாதித்துள்ளார். நீரஜ் சோப்ராவின் வெற்றியை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post