கார்ல்செனை தண்ணீர் குடிக்க வைத்த பிரக்ஞானந்தா.. வென்றால் பரிசு எவ்வளவு?

post-img

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது. உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்செனுடன் இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா மோதுகிறார். நேற்றைய முதல் சுற்று டிராவில் முடிந்ததால் இன்று ஆட்டம் செம விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார். இதையடுத்து 4 டை பிரேக்கரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார் பிரக்ஞானந்தா. 20 ஆண்டுகள் கழித்து செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் ஒருசேரப் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தா இறுதி ஆட்டத்தில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) மோதி வருகிறார். இறுதிச்சுற்று இரு சுற்று போட்டிகளைக் கொண்டது. இரண்டு சுற்றுகளும் சமன் ஆனால் ஆட்டம் நாளை டை பிரேக்கருக்கு செல்லும்.

இறுதிப்போட்டியின் முதல் சுற்று நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 7.22 மணிக்கு போட்டி நிறைவுற்றது. பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். ப்ரக்ஞானந்தாவின் காய் நகர்த்தலுக்கு கார்ல்சன் மிகவும் யோசித்தே காய் நகர்த்தினார். தன்னுடைய 13வது காய் நகர்த்தலுக்கு மட்டும் கார்ல்சென் 27 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.

சிறிய தவறும் ஆட்டத்தை மாற்றிவிடும் என்பதால் இருவரும் மிகவும் நிதானமாகவே ஆடினர். 35-வது நகர்வில் இருவரும் டிரா செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் ஆட்டம் சமன் செய்யப்பட்டது. முதல் சுற்று போட்டியில் இருவரும் சமன் செய்ததால், இன்று நடைபெறும் இரண்டாவது சுற்று போட்டியில் வெற்றி பெறுபவரே சாம்பியன் பட்டம் வெல்வார்.

இன்று மாலை இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில் கறுப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடுவார். 2வது சுற்று போட்டியும் டிரா ஆனால் போட்டி டை பிரேக்கருக்கு நகரும். டை பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெறும்.

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் நபருக்கு 1,10,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 91 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் நபருக்கு 80,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மூன்றாவது இடம் பெறும் வீரர் 60,000 யு.எஸ். டாலர் பெறுவார்.

Related Post