கோவை: கோவைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்த முதலமைச்சர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் கோவையில் உள்ள முக்கிய கோயில்களுக்கு அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மருதமலை மற்றும் பேரூர் கோயில்களுக்கு அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ள தேதியை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சேகர் பாபு, "பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலுக்கு குடமுழுக்கு நடத்திட ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
பேரூரில் தனியார் உதவியுடன் தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அன்னதானக் கூடம், கூடுதல் கழிப்பிட வசதி, பசுமடம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2,000 ஆண்டுகள் தொன்மையான பேரூர் கோயிலுக்கு வருகிற 2025 பிப்ரவரி 10 ஆம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரூர் கோயிலுக்கு விரைவில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படும்.
மருதமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருதமலை கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டு திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கோயிலுக்கு சாலை மார்க்கமாக வந்தால் சுமார் 100 படிகள் ஏறவேண்டிய நிலை உள்ளது.
இதை சரி செய்யும் விதமாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மின் தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மருதமலை கோயிலுக்கு பெருந்திட்ட வரைவின் மூலம் மூன்று கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2025 ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி மருதமலை கோயிலுக்கு குடமுழுக்கு நடத்திடும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும். மேலும் கோயிலுக்கு நிரந்தர வருமானம் ஈட்டும் வகையில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவை கட்டப்படவுள்ளன. இந்தப் பணிகள் அடுத்தாண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும். திராவிட மாடல் ஆட்சியில் இதனை ஒரு ஆன்மிக புரட்சி என்றே சொல்லலாம்.
இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கோயில்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு பக்திமான்களை அறங்காவலர்களாக நியமனம் செய்தோம். அதனால் அனைத்து கோயில்களிலும் அதிக அளவில் உபயதாரர் நிதியினை கொண்டே திருப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுவரை ரூ.1,185 கோடி அளவிற்கு உபயதாரர்கள் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.
பூண்டி, வெள்ளியங்கிரி மலை அடிவார கோயிலுக்கு ரூ.22 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம். சுகாதார வளாகம் உள்ளிட்ட பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல படிகள் அமைக்க வனத்துறையின் அனுமதி பெறவேண்டியுள்ளது.
இதுபோன்ற மலைக் கோயில்களுக்கு பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறுவது தொடர்பாக வரும் ஜனவரி மாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
பாம்பாட்டி சித்தருக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம் கட்டும் பணியை விரைவில் தொடங்கி வைக்கவுள்ளோம். கொங்கு மண்டலத்தை பொறுத்தளவில் பல்வேறு தொன்மையான கோயில்களின் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக சேலம், கோட்டைமாரியம்மன் கோயில், ஈச்சனாரி விநாயகர் கோயில், ஆனைமலை, மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது." என்றார்.