டெல்லி: மேற்கு வங்க அரசு இஸ்லாமியர்களை ஓபிசி பிரிவினராக அறிவித்து இட ஒதுக்கீடு வழங்கியிருந்தது. மேற்கு வங்க அரசின் இந்த முடிவைக் கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்ற மிக முக்கிய கருத்தை சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
மேற்கு வங்க அரசு கடந்த 2010ம் ஆண்டு 77 சாதியினரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (ஓபிசி) வகைப்படுத்தி உத்தரவிட்டது. இதன் மூலம் அந்த சமூகத்தினரும் இட ஒதுக்கீடு பலன்களைப் பெற முடிந்தது.
மேல்முறையீடு: அதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்று சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று சொல்லி மேற்கு வங்க அரசின் உத்தரவைக் கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மதத்தின் அடிப்படையில் தர முடியாது: இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கபில் சிபல் மேற்கு வங்க அரசுக்கு ஆதரவாக ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி கவாய், "மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
கபில் சிபல் வாதம்: உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல், "ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆந்திர ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பைப் பிறப்பித்துள்ளது. ஆனால், ஆந்திர ஐகோர்ட்டின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
மேற்கு வங்க அரசு வழங்கும் இடஒதுக்கீடு என்பது மதத்தின் அடிப்படையிலானது அல்ல. அனைத்து சமூகங்களிலும் பின்தங்கிய மக்கள் உள்ளனர். ஓய்வு பெற்ற நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கொடுத்த ரிப்போர்ட்டில் கூட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கவாய், "பின்தங்கியவர்கள் என்றால் அதை நிரூபிக்கும் தரவுகள் தேவை" என்பதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு கபில் சிபல், "அதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் மாணவர்கள் உட்பட அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 லட்சம் பேரின் ஓபிசி சான்றிதழ் இதனால் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றார்.
எதிர்த் தரப்பு வாதம்: அப்போது எதிர்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.பட்வாலியா, "இட ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்கள் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதைக் கண்டறிய எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. இதற்கான தரவுகள் எதுவும் இல்லை என்பதை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்றாலும் உரிய நடைமுறையைப் பின்பற்றியே உள் ஒதுக்கீடு வழங்க முடியும்" என்றார்.
அப்போது இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால நிவாரணம் வழங்குமாறு கபில் சிபில் கோரிக்கை வைத்தார். இருப்பினும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை ஜன. 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage