திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக கம்பளி, போர்வை விற்பவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு அம்மாள் (75). இவர்கள் தங்கள் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். இவர்களது மகன் செந்தில்குமார் (46), கோவையில் ஐ.டி நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவர் மனைவி, குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்தார்.
கடந்த நவம்பர் 29 ஆம் தேதி செந்தில்குமார், உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சேமலைகவுண்டம்பாளையம் சென்று தனது பெற்றோர்களுடன் தங்கி இருந்தார். அன்று இரவு, இவர்கள் மூவரையும் மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த 8 பவுன் நகையையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.
மறுநாள் காலை அவர்கள் வீட்டிற்கு சென்ற சவரத் தொழிலாளி, அங்கே மூன்று பேரும் தலையில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய கிடந்த தெய்வசிகாமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக டிஐஜி சரவண சுந்தர் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் வழக்கில் முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, தனிப் படைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கொலைக்கு கொள்ளை முயற்சி தான் காரணமா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலையான 3 பேரின் குடும்பத்துக்குள் வேறு பிரச்சனை, முன் விரோதம் இல்லை என தெரியவந்துள்ளது. ஆனால், கொலைக்கான மோட்டிவ் கொள்ளை தானா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாக, கடந்த 14 ஆண்டுகளில், அதாவது 2010க்கு பிறகு இதுபோல நடந்த கொலை வழக்குகள் கணக்கெடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட பழைய வழக்குகளில் தொடர்புடைய 850 பேரின் விவரங்களை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், காங்கேயம், பல்லடம், அவிநாசி பாளையம், தாராபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, தெய்வசிகாமணியின் தோட்டத்தில் வேலை செய்த ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அலமேலு அம்மாளுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, சந்தேகத்தின் பேரில் போலீசார் சாயல்குடி சென்று பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மூவர் படுகொலை தொடர்பாக, கம்பளி, போர்வைகள் விற்பவர்களின் விவரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கம்பளி விற்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பல்லடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து, அவர்களின் ஆதார் விவரம், கைரேகை பதிவு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், தெய்வசிகாமணியின் தோட்டத்தில் மது பாட்டில் கிடைத்துள்ளது. அது குறித்து போலீசார் விசாரித்த போது, 3 பேர் இறப்பையொட்டி வந்த உறவினர் குடித்துவிட்டு போட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்து 10 நாட்களைக் கடந்தும் இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகள் பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage