அமைச்சர் எ.வ.வேலு வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்.. சென்னையில் பரபரப்பு

post-img
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்மா கிராம விவசாயிகள் சென்னையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். செய்யாறு சிப்காட் தொழில்பூங்காவின் 3-ம் கட்ட விரிவாக்கத்துக்காக அனக்காவூர் ஒன்றியம் மேல்மா ஊராட்சிக்குட்பட்ட 11 கிராமங்களில் சுமார் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல்மா ஊராட்சிக்குட்பட்ட 11 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக்கூறி அதனை கைவிட வேண்டும் என விவசாயிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் எ.வ. வேலு வீட்டிற்கு மனு அளிக்க வந்தனர். இதனிடையே அமைச்சர் ஊரில் இல்லை எனக்கூறிய காவலர்கள் அவர்களை திரும்பச்செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த விவசாயிகள் காவலர்களுடன் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Post