சென்னை: அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழ்நாட்டில் இன்று சென்னை, மதுரை உள்ளிட்ட 9மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழகத்தில் போதுமான அளவுக்கு பெய்திருந்தது. ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழை பெய்யும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை தாராளம் காட்டியிருக்கிறது. இது எதிர்பார்த்ததைவிட அதிகம் இல்லை என்றாலும், இதுவே போதுமானதுதான்.
மாவட்ட அளவில் பார்த்தால் திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம் இவை மூன்றும் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் 20% முதல் 59% வரை அதிகமாக மழை பெய்திருக்கிறது.
ஆனால் திருப்பூர், மயிலாடுதுறை, நாகை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் 20% முதல் 59% வரை மழை குறைந்திருக்கிறது. ஏற்கெனவே கர்நாடகா தண்ணீரை கொடுக்காததால் டெல்டா மாவட்டங்கள் ஏமாற்றமடைந்தன. இப்படி இருக்கும்போது பருவமழையும் காலை வாரியிருப்பது விவசாயிகளை புலம்ப செய்திருக்கிறது.
சரி தென்மேற்கு பருவமழைதான் சரியில்லை, வடகிழக்காவது வாழவைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் போதுமானதாக இல்லை. டெல்டா தவிர மற்ற இடங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஓரளவு இருக்கிறது. இனிதான் மழை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்று கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் என 6 மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா, கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மதுரை என 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் மழை தீவிரமாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.