சென்னை: "அதாவது தமிழ்நாட்டுல லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கா, இல்லையா? ஆஃபிசர்ங்க எல்லாம் இருக்காங்களா, இல்லையா? நம்பி புகார்களை அனுப்பலாமா, அனுப்பக்கூடாதா?" என சந்திரமுகி பட வடிவேலு போல் கேட்டால், ரஜினிபோல்தான் கழுத்தைத் திருப்பி ரியாக்ஷன் கொடுக்கவேண்டியிருக்கிறது. காரணம், கடந்த ஒரு வருடத்தில் குவிந்த 21,660 லஞ்சப்புகார்களில் 2 புகார்களுக்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்புத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்புத்துறையை தன்னிச்சையாக செயல்பட விடுவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன் அறிவித்திருந்தார் மு.க.ஸ்டாலின். அப்படியிருக்க, இப்படியொரு குற்றச்சாட்டா? என நாம் ஷாக் ஆகி விசாரித்தபோதுதான் விஜயகாந்த் ஸ்டைலில் புள்ளிவிவரங்களுடன் விவரிக்கிறது அந்த ஆர்.டி.ஐ தகவல்.
முதல் தகவல் அறிக்கை: 2023 ஜனவரி 1 லிருந்து, 2024 ஜூன் 1 வரைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை எனப்படும் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரத்துக்கு வந்த மொத்தப் புகார்களின் எண்ணிக்கை 21,660. இதுல, விசாரணைக்கு எடுத்த புகார்களை மட்டுமே 45 தான். அப்படின்னா விசாரணைக்கே எடுத்துக்காம ரிஜெக்ட் ஆன லஞ்சப்புகார்களின் எண்ணிக்கை 21,615 . அதுவும், விசாரணைக்கு எடுத்துக்கிட்ட 45 புகார்கள்ல, எஃப்.ஐ.ஆர் பதிவு பண்ணின புகார்களின் எண்ணிக்கை வெறும் 2 தான்.
சென்னை ஆலந்தூர்ல இருக்கிற தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஹெட் ஆஃபிஸுல இருக்கிற ஐ.பி.எஸ். அபய்குமார் தலையில இருக்கிற ஐ.ஜிக்கள் 3 பேர். இவங்களுக்கு கீழ 1 டெபுடி ஐ.ஜி., 6 டி.எஸ்.பிக்கள், 6 கூடுதல் எஸ்.பிக்கள், 44 டி.எஸ்.பிக்கள், 101 இன்ஸ்பெக்டர்கள், 46 எஸ்.ஐ.கள், 131 தலைமைக்காவலர்கள், 269 (கிரேடு-1, கிரேடு-2 ) போலீஸுன்னு 608 பேர் இருக்காங்க. 21,660 புகார்கள்ல ஒரு 1,000 புகார்கள்கூடவா உண்மையா வரல? ஆங்...!
மேல்முறையீடும் குறைவு: லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை விசாரணைக்கு எடுக்கிறதே பெரிய விஷயம், அப்படி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த 56 வழக்குகளில், லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படி, தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளில் சரியான ஆதாரங்களையும் ஆவணங்களை திரட்டி மேல்முறையீடு செய்யாமல் அதில், 6 வழக்குகளுக்கு மட்டுமே மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை.
ஏற்கனவே, வரும் புகார்களை விசாரணைக்கு எடுப்பதே 1 சதவீதத்திற்கு கீழ்தான். அதில், எஃப்.ஐ.ஆர் போட்டு கோர்ட்டில் வழக்கு நடத்துவதே ஒரு சில புகார்களில்தான். அப்படி நடத்திய 56 வழக்குகளிலாவது சரியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கலமல்லவா? தண்டனை வாங்கிக் கொடுக்கவும் இல்லை. குறைந்தபட்சம் மேல்முறையீடாவது செய்திருக்கலாமில்லையா?
அரசு பணம் வீண்: லஞ்சப் புகார்களில் விசாரணைகள் செய்து, ஆவணங்களையெல்லாம் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு நடத்த 1 வழக்குக்கு மட்டுமே 10 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசு செலவு செய்வதாக கூறப்படுகிறது. அப்படி என்றால், 50 வழக்குகளை மேல் முறையீடு செய்யாமல், லஞ்ச குற்றச்சாட்டு ஆளானவர்கள் விடுதலை ஆவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பதால் 5 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக (இதெல்லாம் மக்களின் வரிப்பணம் தானே) சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
புள்ளி விவரம்: கடந்த, 2019 ஆம் ஆண்டு 281 ரெகுலர் புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை. 2020 ஆம் ஆண்டு 249 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 248 எஃப்.ஐ.ஆர்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2022 ஆம் ஆண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது, 130 என பாதிக்கு பாதி குறைந்துள்ளது. 2023 அக்டோபர் மாதத்திலும் 102 வழக்குகள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதெல்லாம், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக வெப்சைட்டிலேயே உள்ளது.
அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி-1 ஆம் தேதியிலிருந்து 2023 ஜனவரி-1 ஆம் தேதிவரை, தமிழ்நாடு முழுவதிலிருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகார்கள் 15,772 ஆகும். ஆனால், அதில், 46 புகார்களைத்தான் முதற்கட்ட விசாரணைக்கே எடுத்திருக்கிறார்கள். அதில், 8 புகார்களைத்தான் விரிவான விசாரணைக்கே எடுத்துள்ளார்கள். அப்படியென்றால், 15 ஆயிரத்து 772 புகார்களில் மொத்தம் 54 புகார்கள்தான் விசாரணைக்கே எடுக்கப்பட்டுள்ளன.
2023 வரை 130 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகார்களை 2020 ஆம் ஆண்டு சேர்த்து எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஜனவரி மாதம்வரை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 166 வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதில், 56 பேர் விடுதலை ஆகிவிட்டார்கள். அந்த 56 வழக்குகளில்தான் 6 வழக்குகளுக்கு மட்டுமே மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.
ஜெயராமன் என்ன சொன்னார்?: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை ஆதாரங்கள், ஆவணங்களுடன் அனுப்பிவைக்கும் அறப்போர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனிடம் இதுகுறித்து "ஒன் இண்டியாவிடம்" பேசும்போது, “லஞ்ச ஒழிப்புத்துறைன்னு பொதுவா சொல்லுவோம். ஆனா, இந்த டிபார்ட்மெண்டோட உண்மையான பெயர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (Directorate of Vigilance and Anti-Corruption -DVAC). ஆனா, பெரும்பாலும் பழைய பெயரின்படி சின்ன சின்னதா லஞ்சம் வாங்குறதை பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையா மட்டும்தான் செயல்பட்டுக்கிட்டிருக்கு. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைங்கிறதையே மறந்துட்டாங்க போல. ஊழலை தடுக்கும் புகார்களில் பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கிறதே இல்ல.
பெரிய முதலைகள் எஸ்கேப்: அதாவது, தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் 2 விதமான புகார்கள் பதிவு செய்யப்படுது. அதாவது, லஞ்சம் வாங்குறப்போ பணத்தில் ரசாயன பவுடர் தடவி, மறைஞ்சிருந்து பிடிக்கும் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என சின்ன சின்ன ட்ராப் (TRAP) புகார்கள் 2023 ஆம் ஆண்டு அதிகமாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கு. இதற்கு, லஞ்சம் கேட்கும் ஆடியோ உள்ளிட்ட ஆவணங்களை புகார்தாரர்கள் கொடுக்கவேண்டியிருக்கும். இதுபோன்ற, புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துடுவாங்க. ஆனா, ரெகுலர் கேஸ் (regular case)ன்னு சொல்லப்படுற அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அலுவலர்கள் மீது லட்சக்கணக்குல, கோடிக்கணுக்குல பெரிய பெரிய ஊழல் புகார்கள் கொடுத்தோம்னா, அந்த புகார்களை விசாரணைக்கே எடுப்பதில்லை. அந்த ரெகுலர் கேஸ் தொடர்பானதுதான் இந்த ஆர்.டி.ஐ. ஆதாரங்கள். அறப்போர் இயக்கம் மட்டுமே இதுவரைக்கு 30 ஊழல் புகார்களை கொடுத்திருக்கு. ஆனா, 6 புகார்களுக்கு மட்டும்தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை.
பயணிகள் நிழற்குடை ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் புகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யச்சொல்லி அரசாங்கமே அனுமதி கொடுத்த பிறகும்கூட லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் எஃப்.ஐ.ஆர் போடவில்லை. அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்விதமாக கட்டப்பட்ட கே.பி. பார்க் தரமற்ற குடியிருப்பு ஊழல் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் போடவே, திமுக அரசு இப்போதுவரை அனுமதி கொடுக்கவில்லை.
மேலிட உத்தரவா?: திமுக ஆட்சியில் குவாரி புகார்கள் மீது நடவடிக்கை ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், அந்த புகாரை தமிழ்நாடு அரசின் கனிமவளத்துறைக்கே அனுப்பிவைத்துவிட்டார்கள். ட்ரான்ஸ்ஃபார்மர் ஊழலிலும் எஃப்.ஐ.ஆர் போவில்லை. சாலை போடுவதற்கு முன்பே காண்டிராக்டருக்கு 4 1/2 கோடி ரூபாய் கொடுத்த ஊழலிலும் விசாரணைகூட நடத்தவில்லை. இப்படி, பல புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் நடவடிக்கை எடுக்கலை என்று கேட்டால், வழக்குப்பதிவு செய்தாலே இ.டி. (அமலாக்கத்துறை) ரெய்டு வந்துவிடும். ஆட்சிக்கு கெட்டப் பெயர் உண்டாகும். அதனால, எஃப்.ஐ.ஆர் போடக்கூடாது என்பது மேலிட உத்தரவு என்றே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொல்கிறார்கள்.
ரெகுலர் புகார்களில் மற்ற துறைகளுக்கு அனுப்பும் லஞ்ச- ஊழல் புகார்களை காப்பி டூ -ன்னு போட்டு அனுப்புவதால் நாங்க ரிஜக்ட் செய்கிறோம் என்கிறார்கள். நிறைய மொட்டை பெட்டிஷன்கள் வருகின்றன. அதனாதான், இத்தனை புகார்கள் ரிஜக்ட் ஆகின்றன என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். அதற்காக, 99 சதவீத ரெகுலர் புகார்களை ரிஜக்ட் செய்வது நியாயமா? காப்பி டூ-ன்னு போட்டு வருகிறதோ, மொட்டை பெட்டிஷனாக வருகிறதோ? அதில் ஆதாரங்கள், ஆவணங்கள் இருந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்புகிறார் அறப்போர் ஜெயராமன்.
இதுகுறித்து, விளக்கம் கேட்க சென்னை ஆலந்தூரிலுள்ள தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு அவர்களது வெப்சைட்டிலுள்ள தொடர்பு எண்களான தொடர்புகொண்டபோது, 044- 22321090 மற்றும் 22321085 தொடர்பு எண்கள் வேலை செய்யவில்லை. 044-22342142 என்ற எண்ணில் எடுத்து பேசிய ஆஃபிசர் ஒருவர், “நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஃபோனில் பதில் சொல்லமுடியாது. எங்களுடைய நோடல் ஆஃபிசர் ராமதாஸ் என்பவரை நேரில் அணுகி விளக்கம் கேட்கவும்” என்றார். அவரது தொடர்பு எண் கேட்டபோது கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
அரசு லஞ்ச, ஊழலை ஒழிக்கும் என்று எதிர்பார்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறையையே ஒழித்துக்கட்டிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் லஞ்ச ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள்!
Weather Data Source: Wettervorhersage 21 tage