சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம்.. களமிறங்கிய அதிமுக தொண்டர்கள்.. கைது செய்த போலீஸ்

post-img
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் என அதிமுக அறிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவருடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையின் முக்கியமான கல்வி நிலையமான அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கோட்டூர்புரம் மண்டபம் பகுதியில் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், தினமும் அண்ணா பல்கலைக்கழக வளாகம் வழியாக தனது வீட்டுக்குச் செல்வார் என்றும், இவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட ஞானசேகரன் பற்றி தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரியாணி கடையில் விற்பனை முடிந்ததும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மொபைலில் படம் பிடித்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டியும், காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி மாணவிகளிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஞானசேகரன் மீது கடந்த 2011ஆம் ஆண்டு இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. #WATCH | Chennai | AIADMK workers protesting against DMK over the alleged sexual assault on a student of Anna University in Chennai, detained by police pic.twitter.com/LNw1E4pthd கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அளித்த வாக்குமூலத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறத்தில் உயரம் குறைவான சுவரில் ஏறி குதித்து உள்ளே செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம். அங்கு காட்டுப் பகுதிக்குள் கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கிறார்கள் என நோட்டுமிட்டு, தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயற்சித்து வந்ததாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு இடது மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மாவுக்கட்டு போடப்பட்டு, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன், திமுக நிர்வாகி என குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் உள்ளதாக புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் அண்ணாமலை. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு. ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? என அண்ணாமலை கண்டித்துள்ளார். இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை சரிவர பேணாத திமுக அரசை கண்டித்தும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post