ஜீவனாம்சம் கேட்டு டார்ச்சர்.. குழந்தையை பார்க்க விடாமல் தடுத்த மனைவி! கணவர் தற்கொலை

post-img
காந்திநகர்: திருமணமான பின்னர் 5 வருடங்கள் கழித்து தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி, ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்துவதாகவும், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குஜராத்தில் பேசு பொருளாகி உள்ளது. திருமண முறிவுகள் குறித்த செய்திகள் சமீப காலமாக அதிகமாக காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, ஜீவனாம்சம் கேட்டு மனைவி டார்ச்சர் செய்வதாக புலம்பும் கணவர்களின் செய்திகள் அடிக்கடி பார்க்க முடிகிறது. இதற்கு தொடக்கமாக இருந்தது பெங்களூரு என்ஜினியரின் தற்கொலைதான். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இவர், பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை பார்த்து வருந்திருக்கிறார். இவருக்கும் நிகிதா சிங்கானியா எனும் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் இவர்கள் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில்தான் கடந்த வாரம் பெங்களூரில் உள்ள வீட்டில் இன்ஜினியர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது அறையில், 24 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியிருக்கிறது. அதில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமைகளை தாங்க முடியாமலும், என்னுடைய ஜீவனாம்ச பணத்தை வைத்துக் கொண்டு தன் குடும்பத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமலும் தற்கொலை செய்து கொண்டாக எழுதியிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஜீவனாம்சம் கேட்டு மனைவிகள் டார்ச்சர் செய்கிறார்கள் என்று திருமணமான ஆண்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் நடந்தை போலவே தற்போது குஜராத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. குஜராத்தின் ராஜ்காட் பகுதியில் டிரைவராக மகேஷ் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஹெடல் எனும் பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதியருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்ததாக மகேஷ் நினைத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மை தெரிய வந்திருக்கிறது. அதாவது, இவர் திருமணம் செய்திருந்த ஹெடல் எனும் பெண், ஏற்கனவே திருமணமானவர் என்பதுதான் அது. மட்டுமல்லாது ஹெடலின் முன்னாள் கணவர் தற்கொலை செய்துவிட்டு உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து மனைவி ஹெடலிடம் மகேஷ் விசாரிக்க பிரச்னை தொடங்கியுள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்திருக்கிறது. சண்டை காரணமாக 18 மாதங்களுக்கு முன்னர் ஹெடல் தனது மகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மகளை பார்க்க மகேஷ் முயன்றிருக்கிறார். ஆனால் ஹெடல் அனுமதிக்கவில்லை. எனவே கடந்த சில மாதங்களாகவே மகேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். சடலத்திற்கு அருகில் தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டிருக்கிறார்கள். அதில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மனைவி வேண்டும் என்றே பிரிந்து சென்று, ஜீவனாம்சம் கேட்டு டார்ச்சர் செய்தார் எனவும் கூறியுள்ளார். மகேஷின் சகோதரர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆண், பெண் உறவு என்பது வேறு, குடும்பம் என்பது வேறு. இருவரும் இணைந்து எப்போது ஒரு குடும்பமாக மாறுகிறார்களோ, அப்போதே அவர்கள் இந்த சமூகத்தின் மிக முக்கியமான அங்கமாக ஆகிவிடுகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம், குழந்தை பேறு உள்ளிட்ட விஷங்களுக்கு அரசுதான் முழு பொறுப்பு. குடும்பத்திற்கான வருவாய், அதிலும் குடும்ப தலைவருக்கான வருவாய் இந்த காலங்களில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவை குடும்ப தலைவரின் தலையில் இடியை இறங்கியுள்ளது. இன்று நடக்கும் விவாகரத்துகளுக்கு அடிப்படை காரணமாக பொருளாதாரமும், சமூக சூழல்களும் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த வகையில் தற்கொலைகள் குறித்து அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Post