ஜெய்பூர்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், இதை துல்லியமாக கணித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவை என்று பார்ப்போம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகாலம் நிறைவடைவதை அடுத்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 75.45 சதவீத வாக்குகள் அதில் பதிவாகின. இதனை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை விட பாஜக கூடுதலாக 43 இடங்களில் வெற்றிபெற்று மொத்தம் 116 இடங்களில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற 31 தொகுதிகளை இழந்து 69 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை இழந்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற 4 தொகுதிகளை இழந்து 2 இடங்களில் மட்டுமே வென்று இருக்கிறது. இதர கட்சிகள் 12 தொகுதிகளில் வென்றுள்ளன. இதுவும் கடந்த தேர்தலைவிட 8 தொகுதிகள் குறைவாகும்.
இந்த முடிவுகளை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் துல்லியமாக கணித்து நிறுவனம் எது என்று பார்ப்போம். இந்தியா டுடே - ஆக்சிஸ் நிறுவனங்கள் பாஜக 73 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 100 இடங்களிலும், இதர கட்சிகள் 27 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்தது. நியூஸ் 24 - சானக்யா ஆகிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 89 அல்லது அதை விட 12 அதிக இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 101 அல்லது அதை 12 அதிக இடங்களிலும், இதர கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 80 - 90 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 94 - 104 இடங்களிலும், இதர கட்சிகள் 14 - 18 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்தது. இந்த மூன்று கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெல்லும் என்று குறிப்பிட்டன. 2 கருத்துக்கணிப்புகள் பாஜக வெல்லும் என்று குறிப்பிட்டு ஓரளவு துல்லியமாக முடிவுகளை வெளியிட்டன.
ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 94 - 114 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 71 - 91 இடங்களிலும், இதர கட்சிகள் 9 - 19 இடங்களிலும் வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. டைம்ஸ் நவ் - இடிஜி இணைந்து வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவின்படி பாஜக 108 - 128 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 56 - 72 இடங்களிலும், இதர கட்சிகள் 13 - 21 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்தன. இந்த முடிவுகள் ஏறக்குறைய தேர்தல் முடிவுகளின்படி மெய்யாகி இருக்கிறது.