இந்தா ஆரம்பிச்சிட்டாங்கள்ல.. சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை பார்க் செய்யத் தொடங்கிய மக்கள்!

post-img
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தில் பலரும் கார்களை நிறுத்தி வருகின்றனர். கனமழை காரணமாக வேளச்சேரி பகுதியில் கார்கள் வைத்திருக்கும் நபர்கள் தங்களது வாகனங்களை பாதுகாத்துக் கொள்ள வேளச்சேரியின் மேம்பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் சென்னையில் கனமழை வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. நேற்று இரவு முதல் சென்னையில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பணிகளுக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் சுமார் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8:30 முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக நெற்குன்றத்தில் 10 செ.மீ பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அயப்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம், மீனம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அம்பத்தூர், ஆலந்தூர், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் விமான நிலையம் ஆகிய இடங்களில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் கனமழை பெய்தாலே பாதிக்கப்படும் பகுதிகளில் முக்கியமான ஏரியாவாக வேளச்சேரி உள்ளது. அந்தப் பகுதியில் குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள், வெள்ள நீரில் பாதிப்படைவதும் தொடர்ந்து வருகிறது. இது போன்ற மழை நேரங்களில் தங்களது கார்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, உயரமான பகுதிகளில் பார்க்கிங் செய்வதை வேளச்சேரி மக்கள் வழக்கமாக்கி உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கனமழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தால் கார்கள் பாதிப்படையும் என்பதால், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் கார்களை குடியிருப்பு வாசிகள் பார்க்கிங் செய்தனர். மழைநீர் புகுந்து கார் பழுதானால் பல ஆயிரம் ரூபாயை செலவழிக்க வேண்டியதிருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பிற்காக தங்களது கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினர். வேளச்சேரி, ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது ஏராளமான கார்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் வேளச்சேரி பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலத்தில் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களுக்கு போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்ததாக வீடியோ வெளியானது. ஆனால், மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்தது. அதைத்தொடர்ந்து, கடந்த வாரம், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வேளச்சேரி மக்கள் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தினர். வேளச்சேரி பாலத்தின் இரு பகுதிகளிலும் மக்கள் கார்களை நிறுத்தி இருந்தனர். ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, சென்னையில் மழை விட்ட பிறகு அடுத்த நாள் தான் தங்கள் கார்களை எடுத்துச் சென்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக நேற்று முதல் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மக்கள் மீண்டும் உஷாராகி உள்ளனர். சென்னை வேளச்சேரியில் கனமழை காரணமாக குபேரன் நகர், எல்ஐசி நகர், ஏஜிஎஸ் காலனி ஆகிய பகுதிகளில் கார்கள் வைத்திருக்கும் நபர்கள் தங்களது வாகனங்களை பாதுகாத்துக் கொள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர். சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டை, தங்கச்சாலை, வைத்திய நாதன் சாலை உள்ளிட்ட மேம்பாலங்களிலும் மக்கள் தங்கள் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக மீண்டும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கக்கூடும் என்பதால், கார்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மேம்பாலங்களில் பொதுமக்கள் தங்கள் கார்களை நிறுத்தி வருகின்றனர். மீண்டும் பார்க்கிங் பகுதியான வேளச்சேரி மேம்பாலம்#ChennaiRainsUpdate #Velachery #parkinglot #வேளச்சேரி pic.twitter.com/gPz38PefP4

Related Post