கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த சுபஜா என்பவர் அரசு பள்ளியில் ஒப்பந்தம் அடிப்படையில் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அரசு பேருந்தில் ஏறி திக்கணங்கோட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் பஸ்சில் கருப்பாயி என்ற பெண் சுபஜாவிடம் செய்த காரியம் பலரையும் அதிரவைத்தது.
பொதுவாக பேருந்துகளில் பயணிப்போர் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பேருந்துகளில் ஏறி செல்பவர்கள் பணம், நகைவைத்திருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜேப்படி திருடர்கள் மற்றும் திருடிகள் சர்வ சாதாரணமாக பொதுமக்கள் போல் அமர்ந்து பணத்தை திருடிக்கொண்டு சர்வ சாதாரணமாக செல்வார்கள். அப்படி பலர் பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடந்த மாதம் ஒரு பெண் தனது மகளுக்கு திருமணத்திற்கு நகை வாங்க சேர்த்த பணத்தை மொத்தமாக பறிகொடுத்தார். இதேபோல் பல சம்பவங்கள் அடிக்கடி நடந்த வருகின்றன. அந்த வகையில் ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் நடந்துள்ளது. ஆனால் திருடிய பெண் கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த சுனில் ராஜ் என்பவருடைய மனைவி சுபஜா (வயது 30). இவர் ஒரு அரசு பள்ளியில் ஒப்பந்தம் அடிப்படையில் சத்துணவு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் டிசம்பர் 12ம் தேதி காலை 9.15 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை அடுத்த செம்பிலாவிளையில் இருந்து சொந்த ஊரான திக்கணங்கோட்டுக்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். திக்கணங்கோடு பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் தனது கைப்பையை பார்த்தபோது அது திறந்திருந்தது. பையினுள் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.21 ஆயிரத்தை காணவில்லை.
இதனால் பதறிபோன சுபஜா ஒரு ஆட்டோவை பிடித்து தான் பயணம் செய்த பஸ்சை பின்தொடர்ந்து சென்றார். மத்திகோடு அரசு பள்ளி அருகில் வைத்து அந்த பஸ்சை நடுவழியில் தடுத்து நிறுத்தி டிரைவர், கண்டக்டரிடம் தனது பணம் திருட்டு போன விவரத்தை தெரிவித்தார். அத்துடன் பயணிகள் அனைவரையும் சோதனை செய்ய பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். அப்போது பஸ்சில் இருந்த ஒரு பெண் இருக்கையில் இருந்து எழுந்து தப்பி செல்ல முயன்றார். உடனே பஸ்சில் இருந்த சகபயணிகள் அவரைப் பிடித்துக் கொண்டனர். மேலும் அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் திருட்டு போன ரூ.21 ஆயிரம் கிடந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணை பொதுமக்கள் கருங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை அடுத்த சமீர் வியாஸ் நகரை சேர்ந்த பரமசிவம் என்பவருடைய மனைவி கருப்பாயி (வயது 40) என்பதும், அவர் சுபஜாவின் பணத்தை திருடியதும், மாட்டி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டவுடன் பணத்தை இருக்கையின் அடியில் போட்டுவிட்டு தப்பி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.