அடுத்த டார்கெட் ம.பி, சத்தீஸ்கர்.. ஆம் ஆத்மி போடும் பிளான்! அப்போ "இந்தியா" கூட்டணி

post-img

டெல்லி: இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி இப்போது வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு இறுதியில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என மூன்று இந்தி பேசும் மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும், இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆம் ஆத்மி: அதேநேரம் மறுபுறம் டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி மற்ற மாநிலங்களிலும் தங்கள் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ஆம் ஆத்மி டெல்லியைத் தாண்டி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. கடந்த முறை அங்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.
இதற்கிடையே இப்போது மற்ற மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி இறங்கியுள்ளது. இந்தாண்டு இறுதியில் நடக்கும் சட்டசபைத் தேர்தலிலும் சில இடங்களில் ஆம் ஆத்மி களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே இப்போது ஆம் ஆத்மி மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் போட்டியிடும் தனது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல்: மத்தியப் பிரதேசத்தில் 29 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 தொகுதிகளுக்கும் இப்போது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு ஆம் ஆத்மி தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் என்றே தெரிகிறது. முன்னதாக கடந்த செப்.8ஆம் தேதி சத்தீஸ்கர் மற்றும் ம.பி தேர்தலுக்கு ஆம் ஆத்மி 10 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. பல சர்வேகள் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் என இரு கட்சிகளும் "இந்தியா" கூட்டணியில் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மியின் இந்த நடவடிக்கை பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த தேர்தல்: முன்னதாக 2018 சட்டமன்றத் தேர்தலில், சத்தீஸ்கரில் ஆம் ஆத்மி 85 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் அவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரில் கடந்த முறை காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்கு 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக தோல்வியைத் தழுவியது.
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கும் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 114 இடங்களில் வென்று ஆட்சி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து. இருப்பினும், காங்கிரஸின் சிந்தியா கலகம் செய்து பாஜகவில் இணைய.. கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் அங்கே சவுஹான் முதல்வரானார்.

 

Related Post