சென்னை: தமிழகத்தில் காவல் துறைக்கே பாதுகாப்பில்லை. திமுக மூழ்கப் போகிற கப்பல். அவர்களுடன் எத்தனை கட்சிகள் இருந்தாலும் அவர்களும் மூழ்கி விடுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதாலும் அதிமுகவின் இந்த பொதுக்குழு அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பொதுக்குழுவில் 17 தீர்மானங்களும், செயற்குழுவில் 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவைப் பொருத்தவரை மூழ்கப் போகிற கப்பல். அந்த மூழ்கப் போகிற கப்பலில் எத்தனை பேர் ஏறினாலும் அவர்களும் மூழ்கி விடுவார்கள். அதிமுக என்பது மக்கள் பக்கம் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு இருந்தது. சட்ட ஒழுங்கு, கள்ளச் சாராயம், கட்டப் பஞ்சாயத்து, இளம்பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை போன்ற எதுவும் கிடையாது.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, வழிப்பறி, காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை, அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது. மத்திய அரசை பொதுக் குழுவில் என்ன கண்டிக்க வேண்டும். மாநில அரசை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
மத்திய அரசு இப்போதுதான் அமைந்திருக்கிறது. அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு கடந்த பத்து மாதங்களாக ஏன் திமுக அரசு சுரங்கத்தை அமைக்கக் கூடாது என ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்க தொழிற்சாலை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்கள் எதிர்ப்பு கிளம்பும் என முதலில் கூறியிருந்தால் இதனை கொண்டு வந்திருக்க மாட்டோமே என மத்திய அரசு கூறுகிறது. ஏன் திமுக அரசு அதனை செய்யவில்லை. திமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
ஏலம் விடும் முறையை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று திமுக அரசு கேட்கிறது. உட்கட்சி பிரச்னைகள் குறித்த கேள்விக்கு, ஜனநாயக இயக்கத்தில் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. அவரவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். பொதுச் செயலாளர் அதுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். அதிமுகவில் நிறைய தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துகள் இருக்கும் என்றார்.