திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்துகளை வாங்க உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் 2020இல் தொடங்கிக் கடந்த சில ஆண்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வேக்சின் பணிகள், கொரோனா முன்னெச்சரிக்கை பணிகள் எனப் பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு இப்போது தான் கொரோனா கட்டுக்குள் வந்து நாம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம்.
இதற்கிடையே அதிர்ச்சி தரும் வகையில் இப்போது இந்தியாவில் நிபா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு இருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு நிமினோ பாதிப்பு இருந்துள்ளது. அவர்களிடம் இருந்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், நிபா பாதிப்பு உறுதியானது.
நிபா வைரஸ்: இதுவரை 6 பேருக்கு அங்கே நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் நிபா பரவல் காரணமாக அங்கே சுகாதாரத் துறை ஹை அலர்ட் மோடில் இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த நிபா வைரஸ் காரணமாகப் பள்ளிகள், டியூஷன் சென்டர்கள் என்று அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், நிபா உறுதியானவர்கள் உடன் தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது இது நான்காவது முறையாகும்.. கேரளாவில் இப்போது பரவும் நிபா வைரஸ் வேரியண்ட் என்பது வங்கதேசத்தில் முதலில் கண்டறியப்பட்டதாகும். இது பரவல் விகிதம் குறைவாக இருந்தாலும் கூட இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ரொம்பவே அதிகம். ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் 2-3% என்றால் இந்த நிபா வைரஸ் 75% வரை உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.
இந்த நிபா வைரசுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது இதை மேலும் சிக்கலான ஒரு விஷயமாக மாற்றுகிறது. நிபா வைரசால் பாதிக்கப்பட்ட வெளவால்கள், பன்றிகள் அல்லது மனிதர்களின் உடல் திரவங்கள் மூலம் இது மற்றவர்களுக்குப் பரவுகிறது. கேரளாவில் 4ஆவது முறையாக இந்த பாதிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா மருந்துகள்: இதற்கிடையே நிபா வைரசுக்கு சிகிச்சை தரும் வகையில் ஆண்டிபாடிகளை ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா வாங்க உள்ளது. நிபா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூடுதலாக 20 டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வாங்கவுள்ளதாக ஐசிஎம்ஆர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐசிஎம்ஆர் அமைப்பின் ராஜீவ் பால் கூறுகையில், "கடந்த 2018இல் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட போது ஆஸ்திரேலியாவில் இருந்து சில டோஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் வாங்கினோம். இருப்பினும், இப்போது 10 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மட்டுமே நம்மிடம் கையிருப்பு இருக்கிறது. இதுவரை 6 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் யாருக்கும் இந்த மருந்தை வழங்கவில்லை. இன்னும் கூடுதலாக 20 டோஸ்களை வாங்க உள்ளோம். இருப்பினும், பாதிப்பு ஏற்பட்ட தொடக்க நாட்களிலேயே இதைக் கொடுக்க வேண்டும்.
நோயாளிகள்: இப்போது கேரளாவில் சிலருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது நிபா வைரஸ் கண்டறியப்பட்ட அனைவரும் முதல் நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தான்" என்று அவர் தெரிவித்தார்.
கேரளாவில் மட்டும் ஏன் திரும்பத் திரும்ப இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு அவர், "ஏன் கேரளாவில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது எனத் தெரியவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில், இதேபோல கேரளாவில் நிபா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது வெளவால்களில் இருந்து அது பரவி இருந்தது. வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு எப்படிப் பரவியது என்று தெரியவில்லை. எங்கே பரவியது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
இப்போது மீண்டும் பாதிப்பு ஏற்பாடுள்ள நிலையில், மனிதர்களுக்கு அது எப்படிப் பரவியது என்பதைக் கண்டறிய முயல்கிறோம். எப்போதும் மழைக் காலத்தில் தான் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.