சென்னை: மண்வாசனை படத்தில் வரும் ‛பொத்திவச்ச மல்லிகை மொட்டு' பாடலில் இடம்பெற்றிருக்கும் ‛‛ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்" என்ற வரிகளுக்கு 40 ஆண்டுகளாகியும் அர்த்தம் தெரியவில்லை என புகார் வருவதாக கூறிய வைரமுத்து அதற்கான விளக்கத்தை கூறி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
வைரமுத்து.. தமிழ் சினிமாவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதிய பாடலாசிரியர். கவிஞர், எழுத்தாளர் என பல்துறைகளில் கலக்கி வரும் வைரமுத்து தமிழ் சினிமாவில் இன்றும் கொடிகட்டி பறந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்களின் பல்ஸை பிடித்து பாடல் வரிகளை செதுக்குவது தான்.
இன்னும் சொல்லப்போனால் இவர் எழுதிய பல பாடல்கள் இன்றும் காதல் ஜோடிகளுக்கு தேசியக்கீதமாகவே இருந்து வருகிறது. இதனால் தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி வைரமுத்துக்கு ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் தான் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான மண்வாசனை திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தில் வைரமுத்து, ‛பொத்திவச்ச மல்லிகை மொட்டு' என்ற பாடலை எழுதியுள்ளார். மண்வாசனையின் 40 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்த பாடல் குறித்த முக்கிய விஷயத்தை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது ‛பொத்திவச்ச மல்லிகை மொட்டு' பாடலில் "ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்" என்ற வரி வரும். இந்நிலையில் தான் இந்த வரிகளின் பின்னணி அர்த்தம் என்ன? என்பது புரியவில்லை என இன்று வரை அவருக்கு புகார் வருவதாக வைரமுத்து கூறியுள்ளார். அதோடு தற்போது அதற்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛இன்றுடன் நாற்பது ஆண்டுகள் பாரதிராஜாவின் மண்வாசனை வெளிவந்து.. "ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்"என்ற வரியின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது. ‛‛என் வெட்கத்தின் சிவப்பு நிறம் பார்த்து அது ஆசையின் அழைப்பென்று கருதி என் முரட்டு மாமன் திருட்டுவேலை செய்துவிடக்கூடாது.. அதனால் மஞ்சள் பூசி என் வெட்கத்தை மறைக்கிறேன்'' என்பது விளக்கம்.
இந்த நாற்பது ஆண்டுகளில் காதலின் விழுமியம் மாறியிருக்கிறது வெட்கப்பட ஆளுமில்லை மஞ்சளுக்கும் வேலையில்லை'' என தனது பாணியில் கூறியுள்ளார். இதனை படித்த பலரும் ‛ஓ இதுதான் அர்த்தமா' என கூறி வரும் நிலையில், சிலரோ நாங்கள் நினைத்த அர்த்தம் சரிதான் வைரமுத்து சார் என தெரிவித்து வருகின்றனர்.
இந்த பாடல் இடமபெற்ற திரைப்படமான மண்வாசனை படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கி இருந்தார். 1983ம் ஆண்டு அக்டோபர் 16ல் வெளியான இந்த படத்தில் ஹீரோவாக பாண்டியனும், ஹீரோயினாக ரேவதியும் நடித்து இருந்தனர். இதுதவிர நடிகர்கள் வினுசக்கரவர்த்தி, ராமநாதன், சேனாதிபதி, சூர்யகாந்த், விஜயன், நடிகைகள் அனிதா பாலன், காந்திமதி உள்பட பலர் நடித்து இருந்தனர். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுடன்
நாற்பது ஆண்டுகள்
பாரதிராஜாவின்
மண்வாசனை வெளிவந்து
“ஆத்துக்குள்ள நேத்து
ஒன்ன நெனச்சேன்
வெக்கநெறம் போக
மஞ்சக் குளிச்சேன்”என்ற வரியின்
பொருள் புரியாமல்
இன்னும் புகார் வருகிறது
"என் வெட்கத்தின்
சிவப்பு நிறம் பார்த்து
அது ஆசையின்
அழைப்பென்று கருதி
என் முரட்டு மாமன்…