சென்னை: சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், விசிக தலைவர் திருமாவளவனின் மனது இங்கே தான் உள்ளது என கூறியிருந்தார். இந்நிலையில், திருமாவளவனின் மனசாட்டி திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வேடமும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு வேடமும் போட்டிருப்பதாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன்.
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் விகடன் விகடன் குழும நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா,"விசிக தலைவர் திருமாவளவன் இங்கு இல்லை.. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். திருமா அண்ணனின் கனவு என்ன? தலித் மட்டும் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கரை, தலித் அல்லாத விஜய் வெளியிடுவது என்பதுதான். புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு. திருமாவின் கனவு. இன்று அந்த கனவு ஈடேறியிருக்கிறது" என்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் தவெக தலைவருமான விஜய்,"விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அவர்களால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் அழுத்தம் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன்.. அவருடைய மனது முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்" என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பேசியிருந்த திருமாவளவன்," நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கததற்கு காரணம் திமுக அல்ல.. திமுக அழுத்தம் கொடுத்ததாக விஜய் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு விஜய் காரணம் அல்ல" என கூறியிருந்தார்.
இந்நிலையில், திருமாவளவனின் மனசாட்சி திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வேடமும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு வேடமும் போட்டிருப்பதாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"அனைவருக்குமானவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணன் திருமாவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியில் இருக்கும் துணைப் பொதுச் செயலாளரே கூறுகிறார்
இன்றைய அரசியல் நாடகத்தில் அண்ணன் திருமா அவர்களின் இரட்டை வேடம் ஒரு வேடத்தின் மனசாட்சி அங்கே! மேடையில் ஒரு வேடம்! இங்கே மன்னர் ஆட்சி நடத்தும் திமுகவின் அரசாட்சியோடு.. ஒரு வேடம்! திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்!திமுக கூட்டணிக்கு ஆதரவாக.. நேராக செல்லாதது நேர்மையான முடிவா? அல்லது நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம்.. என்ற முன்னெச்சரிக்கை? முடிவா.. அல்லது எச்சரிக்கை செய்யும் முன்னோட்டமா?" என கூறியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage