சென்னை: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் சரியான கூட்டணி அமைத்தால் அவர் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கும் என முன்னாள் எம்எல்ஏவும் பாஜக நிர்வாகியுமான விஜயதாரணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 2026 ம் ஆண்டு பாஜக ஆட்சி அமையும் என பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில் விஜய்க்கு ஆதரவாக விஜயதாரணி பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி். வழக்கறிஞரான இவர் காங்கிரஸ் கட்சியில் மூத்த முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார். இந்த நிலையில் அவர் சட்டசபையில் எதிர்க்கட்சிகளை கண்டித்து பலமுறை ஆக்ரோஷமான உரைகளையாற்றியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது கன்னியாகுமரி தொகுதியை தனக்கு ஒதுக்குவார்கள் என எதிர்பார்த்தாக தெரிகிறது. ஆனால் எச்.வசந்தகுமாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் கொரோனாவால் உயிரிழந்ததும் , அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அந்த தொகுதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதாவது தனக்கு அந்த தொகுதியை காங்கிரஸ் மேலிடம் ஒதுக்கும் என விஜயதாரணி எதிர்பார்த்ததாக தெரிகிறது. ஆனால் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் விஜயதாரணிக்கு மீண்டும் ஏமாற்றமே ஏற்பட்டது.
இதனால் காங்கிரஸ் கட்சி மீது விஜயதாரணிக்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் கட்சி மாறுவார் என சொல்லப்பட்டது. அதிமுக நிர்வாகிகளிடம் சட்டசபை அவர் பேசியதால் அவர் அதிமுகவுக்கு போகிறாரோ என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் விஜயதாரணி , பாஜகவில் இணைவதற்காக டெல்லி சென்றதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்ட போது நிச்சயம் விஜயதாரணி காங்கிரஸை விட்டு விலக மாட்டார் என தெரிவித்தார். ஆனால் விஜயதாரணி அன்றைய தினமே எல்.முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்தான் கன்னியாகுமரி தொகுதி தனக்கு கொடுக்காத மன வருத்தத்தை பதிவு செய்தார். மேலும் காங்கிரஸில் பெண்கள் மேலே உயருவதை தலைமை விரும்பவில்லை என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
பாஜகவில் சேர்த்து பல மாதங்களான நிலையில் தனக்கு இன்னும் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் பாஜக கூட்டத்தில் விஜயதாரணி முன் வைத்திருந்தார். பாஜகவுக்கு போய் பதவியும் இல்லாமல் ஏற்கெனவே காங்கிரஸ் இருந்த பதவியும் போய் எம்எல்ஏ அந்தஸ்தும் போய் விஜயதாரணி நிராதரவற்று நிற்பதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் விரைவில் காங்கிரஸுக்கே திரும்பி வந்துவிடுவார் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், விஜய்யை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் சில அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. விஜய் வரும் தேர்தலில் சரியான கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கலாம்.
அப்படி கூட்டணி அமைக்க முடியாவிட்டால் வாக்குகளை பிரிக்கும் பல கட்சிகளில் ஒன்றாகவே தவெக இருக்கும் . 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களம் பல முனை போட்டியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமையும் என அண்ணாமலை உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில் விஜயதாரணியோ விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.