சென்னை: வேலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் கைதாகி இருக்கும் நிலையில், இன்று திமுக ஊராட்சி தலைவர் பாலா சேட் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி குறித்து தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்து வந்ததால் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் விட்டல் குமார் (வயது 47). இவர் வேலூர் பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார். மர்ம நபர்கள் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
வேலூர் மாவட்ட பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சந்தோஷ் குமார், கமலதாசன் ஆகிய 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் பாஜகவின் இந்த சம்பவத்தில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாக கூறி வந்தனர். பாஜக தலைவர் அண்ணாமலையும், பொதுமக்கள் பிரச்சினைக்கு நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்தவர் விட்டல் குமார்.
திமுகவின், நாகல் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டு என்ற நபருக்கும் விட்டல் குமாருக்கும் பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாக தெரிவதாகவும், இதனால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தொடர்ந்து போலீசார் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் தான் இன்று விட்டல் குமார் கொலை வழக்கில் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட்டுவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலா சேட்டு தான் சரணடைந்துள்ள இரண்டு பேரையும் வைத்து விட்டல் குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும், விபத்து ஏற்படுத்துவது போல் இந்த சம்பவத்தை வடிவமைக்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.