டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா காந்தி, அனுராக் தாகூர் உள்பட லோக்சபாவில் இருந்து 21 பேர், ராஜ்யசபாவில் இருந்து 10 பேர் என்று மொத்தம் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 269 பேரும், எதிராக 198 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா வெற்றிபெற வில்லை. அதாவது இந்த மசோதவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும். அப்படி பார்த்தால் நேற்று லோக்சபாவில் மொத்தம் 461 பேர் இருந்தனர். இதனால் 307 எம்பிக்களின் ஆதரவு என்பது வேண்டும். ஆனால் 269 எம்பிக்கள் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக 198 பேர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப பிரதமர் மோடி விரும்புகிறார் என்றார். அதன்பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம்பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மொத்தம் 31 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 21 பேர் லோக்சபா எம்பிக்கள். 10 பேர் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, பாஜகவின் அனுராக் தாகூர் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்துள்ளனர்.