அரசு பேருந்தில் தொங்கிய மாணவர்களை தாக்கிய விவகாரம்.. நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது

post-img

சென்னை: அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கியதாக சென்னை கெரும்பாக்கத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார்.


சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நடிகையும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் அரசு பேருந்தை தடுத்து நிறுத்தினார்.


அப்போது டிரைவரிடம் போய் படிக்கட்டில் இப்படி தொங்கிக் கொண்டு வருகிறார்கள். நீங்கள் கேட்கமாட்டீர்களா என்றார். மேலும் அங்க பாருங்க ஒருத்தன் மேலே ஏறுகிறான் என்றான். உடனே பேருந்தின் பின்பக்கம் சென்ற அவர், தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்து வெளியே தள்ளினார்.


வர மறுத்த மாணவர்களை அடித்தார், அதிலும் பேருந்து மீது ஏறிய ஒரு பள்ளி மாணவனை சரமாரியாக அடித்தார். மேலும் பள்ளி பேட்ச்சையும் காட்டி அடித்தார். மேலும் மாணவர்களை நாய், ஏன்டா அறிவில்ல என அழைத்து கடுமையாக கத்தினார். அது படிக்கட்டில் யாரெல்லாம் நிற்கிறார்களோ அவர்களை எல்லாம் இறக்கிவிட்டார். மேலும் கன்டக்டரிடம் ஏன் நீங்கள் இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா?


உங்களுக்கும் பிள்ளை குட்டிகள் எல்லாம் இருக்குல்ல என கேட்டு அதிரடி காட்டினார். ஆனால் ரஞ்சனா மட்டும் அந்த பேருந்தை தடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்த பேருந்தில் இருந்து யாராவது மாணவர்கள் கீழே விழுந்து காயமோ உயிரிழப்போ ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் இவரது அதிரடி காட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.


இவர் செய்தது 100 சதவீதம் சரி என வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. மேலும் படியில் பயணம், நொடியில் மரணம் என்பதை சில மாணவர்களும் இளைஞர்களும் புரிந்து கொண்டதாக இல்லை. அது போல் பஸ் டே, ஆயுத பூஜை வேளைகளில் பேருந்தின் மீது பயணிப்பதும், பேருந்து இயங்கும் போதே ஏறி நடப்பதும் என மாணவர்கள் விதிகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.


இந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது மாணவர்களை தாக்கியதாக ஒரு வழக்கும், டிரைவர் , கன்டக்டரை அவதூறாக பேசியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை கெரும்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனா நாச்சியார் வீட்டில் மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தியதை அடுத்து அவரை கைது செய்தனர்.


கைது செய்ய வாரண்ட் எங்கே என கேட்ட ரஞ்சனா நாச்சியாரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவாகிவிட்டதால் வாரண்ட் தேவையில்லை என கூறியபடி போலீஸார் கைது செய்தனர். நேற்று இந்த வீடியோ வெளியானது முதலே இந்த சம்பவத்திற்கு இரு வேறு கருத்துகள் சமூகவலைதளங்களில் பதிவாகி வருகின்றன. இவர் செய்தது சரி என்றாலும் சட்டத்தை கையில் எடுக்க இவர் யார்? அங்கிருந்த போலீஸாரை அழைத்து சொல்லியிருக்கலாமே, குழந்தைகளின் பள்ளி அடையாளம் தெரியும் அளவுக்கு நடந்துக் கொள்வதா, அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

 

Related Post