சென்னை அருகே காக்கா பிரியாணி விற்பனை? காகத்தை விஷம் வைத்து கொன்ற தம்பதி சொன்ன திடுக் தகவல்

post-img
சென்னை: சென்னை அருகே திருவள்ளூரில் காகத்துக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதி வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து இறந்த நிலையில் 19 காகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே தான் சாலையோர உணவகங்கள் இந்த தம்பதியிடம் இருந்து காகத்தை வாங்கி பிரியாணி சமைத்தார்களா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நயப்பாக்கம் காப்பு காடு உள்ளது. இங்கு சிலர் காகத்தை விஷம் வைத்து கொன்று சாலையோர பிரியாணி கடைளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது திருப்பாக்கம் கிராமத்தில் உள்ள காப்பு காட்டில் ஒரு தம்பதி வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது வனத்துறையினர் ஷாக் ஆகினர். அதாவது பையில் இறந்த காகங்கள் இருந்தன. இதையடுத்து தம்பதியை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர்களின் பெயர் ரமேஷ் - பூச்சம்மா என்பது தெரியவந்தது. அதோடு அவர்கள் காகத்துக்கு விஷம் வைத்து கொன்றதும் தெரியவந்தது. காகத்தை கொன்றது ஏன்? என்று கேட்டபோது அந்த தம்பதி, ‛‛நாங்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். எங்களின் குடும்பத்தில் மொத்தம் 7 பேர் இருக்கிறோம். எங்களின் உணவு தேவைக்காக காகத்தை வேட்டையாடினோம்'' என்று கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து 19 இறந்த காகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‛‛பிடிபட்ட தம்பதியை கைது செய்யவில்லை. அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. "வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் கீழ் காகங்கள் vermin ஆக கருதப்படுகிறது. இதனால் அவர்கள் கைது செய்யவில்லை. அவர்கள் மீது வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து காகத்தை கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தின் உணவுக்காக காகத்தை லேசான விஷத்தன்மை கொண்ட பொருளை வைத்து வைத்து கொன்றுள்ளனர். இந்த விஷத்தை அவர்கள் பூச்சிக்கொல்லி மருந்து விற்கும் கடையில் வாங்கி உள்ளனர்'' என்றனர். மேலும் காகத்தை வேட்டையாடி சாலையோர பிரியாணி கடைகளுக்கு சிலர் விற்பனை செய்வதாகவும், அதோடு காகத்தின் இறைச்சி பிரியாணி உள்பட அசைவ உணவில் கலக்கப்படுவதாகவும் புகார் எழுந்த நிலையில் இந்த தம்பதி சிக்கி உள்ளனர். ஆனாலும் வறுமை காரணமாக அவர்கள் காகத்தை உணவுக்காக வேட்டையாடி இருக்கலாம் என்று வனத்துறையினர் நம்புகின்றனர். அதேவேளையில் அவர்களின் சாலையோர கடைகளுக்கு இறைச்சிக்காக காகத்தை விற்றனரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுபற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால் திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சாலையோர உணவகங்களில் காகத்தின் இறைச்சியை மிக்ஸ் செய்து பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post