தமிழக மக்களை மேடையில் பாராட்டிய ரேவந்த் ரெட்டி.. தெலுங்கானாவும் ஃபாலோ செய்ய வேண்டுமாம்! என்ன மேட்டர்

post-img
கன்னியாகுமரி: தமிழக மக்களையும், கேரளா மக்களையும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் நீங்கள் மதவாத சக்திகளை இங்கு அனுமதிக்கவில்லை. இருமாநில மக்களும் மதவாத சக்திகளை முறியடிக்கிற சிறந்த மாநிலமாக உள்ளன. தெலுங்கானா மக்களும் தமிழ்நாடு, கேரளாவை பின்பற்றி வாழ நினைக்கிறோம் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27வது கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. புண்ணியம் பகுதியில் இருந்து அருமனை வரை ஊர்வலம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டினார். விழாவில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது தமிழக மக்களை புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர் கூறியதாவது: நமது தலைவர் ராகுல்காந்தி நாட்டில் உள்ள தீய சக்திகளை எதிர்க்கிறார். அவர் உண்மையான அன்பையும், கிறிஸ்துமஸின் தன்மையையும் பிரதிபலிக்கக் கூடியவராக இருக்கிறார். உங்கள் அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை இந்த கன்னியாகுமரி மண்ணில் இருந்து தொடங்கினார். இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் நீங்கள். நான் கேரள மாநில மக்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் நீங்கள் மதவாத சக்திகளை இங்கு அனுமதிக்கவில்லை. நம்முடைய ஒற்றுமையே நமக்கு பலமாக இருக்கிறது. அந்த ஒற்றுமையையே நம் நாட்டின் பலமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களும், கேரள மக்களும் மதவாத சக்திகளை முறியடிக்கின்ற சிறந்த மாநிலமாக உள்ளன. தெலங்கானா மக்களும் கேரளா, தமிழ்நாட்டை பின்பற்றி வாழ விரும்புகிறோம். தெலுங்கானாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரும் வசிக்கிறோம். காங்கிரஸ் கட்சி எனும் ஒரு குடையின் கீழ் ஒரே குடும்பமாக வாழ்கிறோம். தெலங்கானா அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிவாசிகளுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது'' என்றார்.

Related Post