கடலூரில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

post-img
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆம்னி பேருந்து திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் மாலை, இரவு நேரங்களில் தனியார் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 57 பயணிகள் இருந்தனர். இந்த ஆம்னி பேருந்து இரவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஒருவர் இறந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் வந்து பயணிகளை மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே தான் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post