திடீர் தொழில்நுட்ப கோளாறு.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு.. மக்களே நோட் பண்ணுங்க

post-img
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மெட்ரோ ரயில் பயன்படுத்தி பணிக்கு செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக பயணிக்க மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று இரவு திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதாவது சென்னை தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சுரங்கபாதையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு 10 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த பிரச்சனை இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. இதனால் ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று காலையிலும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையம் முதல் விம்கோ நகர் டெப்போ வரையிலான மெட்ரோ ரயில் சேவை 18 நிமிடத்துக்கு ஒருமுறை இயங்குகிறது. விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை, டோல்கேட் முதல் விம்கோ நகர் டெப்போ இடையே மெட்ரோ ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்ட்ரல் - ஏர்போர்ட் வழித்தடத்தில்7 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதனால் மெட்ரோ ரயிலில் இன்று காலையில் வேலை, கல்லூரிக்கு செல்லும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிப்பது நல்லது. இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. அதோடு பிரச்சனையை விரைவில் சரிசெய்வதாக தெரிவித்துள்ளது.

Related Post