ஒரு மணி நேர பேச்சு..79 முறை கைத்தட்டல்...அமெரிக்க நாடாளுமன்றம்-பிரதமர் மோடி

post-img

ஜனநாயகத்தின் தாய்நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசியுள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, பல்வேறு துறைசார்ந்த பிரபலங்ள், தொழிலதிபர்களை சந்தித்த பிறகு, அமெரிக்க அதிபர் பைடனுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். 2016ஆம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டுக் கட்டடத்தில் நின்று பேசியது பெருமை அளிப்பதாக கூறினார்.

மகாத்மா காந்தி மற்றும் மார்டின் லூதர் கிங் ஜூனியரை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். மேலும் கடந்த 9 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், ஆனால் முக்கியமான A-I என்பது அமெரிக்கா - இந்தியாவின் நல்லுறவு என்றார். இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டினர்.

பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகம் என்பது ஒரு கலாசாரம் என்றும் அந்த கலாசாரம் கருத்துகளுக்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் சிறகு அளிக்கும் என்றார். ஜனநாயகத்தின் தாய் நாடாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாம் அமெரிக்காவிற்கு வந்த போது உலகின் 10ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்ததாகவும், இது தற்போது 5ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளதாகவும், விரைவில் மூன்றாவது இடத்துக்கு பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறுவோம் என்றார்.

பாரிஸ் உச்சி மாநாட்டின் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்கு முன்பாகவே இலக்கை எட்டிய ஒரே ஜி-20 நாடு இந்தியா என பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் 2500 அரசியல் கட்சியினர் இருப்பதாகவும், 20 மாநிலங்களை வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்துள்ளதாகவும், பாதுகாப்புப் படையில் இந்திய மகளிரின் பங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரம் பழங்குடியின பெண் ஒருவர், குடியரசுத் தலைவராக இந்தியாவை வழிநடத்துவதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

உக்ரைன் போர் தொடர்பாக தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது போருக்கான காலமல்ல என்றும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு உகந்த நேரம் என்றும் தெரிவித்தார். இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாதம் உலகிற்கே பேராபத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிய பிரதமர் மோடியை அந்நாட்டு எம்பிகள் வியப்புடன் கைதட்டி உற்சாகப்படுத்தினர். பிரதமர் மோடியின் பேச்சுக்கு மொத்தம் 15 முறை எம்பிகள், பிரதிநிதிகள் எழுந்து நின்றும், 79 முறையும் கைதட்டல்கள் கிடைத்தன.

 

Related Post