பாழடைந்து கிடக்கும் சசிகலா பூர்வீக வீடு; வீதி விநாயகருக்கு ஜெயலலிதா தந்த கலசம்!

post-img
திருத்துறைப்பூண்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பிறந்த பூர்வீக வீடு கேட்பாரற்று பாழடைந்து போய் கிடக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழல்போல கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிகார மையமாக வலம் வந்தவர் வி.கே. சசிகலா. அதாவது எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றப் பக்கபலமாக சசிகலா குடும்பம்தான் நின்றது என்ற கருத்து டிடிவி தினகரன் உட்படப் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசனுக்கு 1973 ஆம் ஆண்டு திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அப்போது நடராசன் திமுகவிலிருந்தார். சசிகலா திருத்துறைப்பூண்டியில் 1954 ஆம் ஆண்டு பிறந்தார். இப்போது அவருக்கு 70வயதாகிறது. 1987க்குப் பின்பு அவர் நிரந்தரமாகச் சென்னையில் ஜெயலலிதாவுடன் தங்கவிட்டார். அவரது பூர்வீக நகரத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் இப்போதும் வாழ்ந்துவருகின்றனர். சசிகலாவின் குடும்பம் மிகப்பெரியது. அவருடன் பிறந்தவர்கள் உறவினர்கள் என பல அரசியல் களத்தில் பதவிகள் மற்றும் அதிமுகவில் பொறுப்புகள் வகித்துள்ளனர். திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட தட்டாரத் தெருவில்தான் வி.கே.சசிகலா பிறந்து வளர்ந்த பூர்வீக வீடு இப்போது உள்ளது. இங்கே அவரது இளமைக் காலத்தில் ஒரு ஓட்டு வீடுதான் இருந்தது. அதில்தான் இவரும் அவரது பெற்றோரும் வாழ்ந்து வந்துள்ளனர். சென்னையில் குடியேறுவதற்கு முன்னர் சசிகலா தனது கணவருடன் மன்னார்குடியில் உள்ள மன்னை நாராயணசாமி நகரில் ஒரு வீட்டில்தான் வாடகைக்கு இருந்துள்ளார். அந்த வீடும் இப்போது அப்படியே உள்ளது. அதில் யாரும் குடியில்லை. அதே தெருவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடும் உள்ளது. இதிலும் யாரும் தற்போது இல்லை. திருத்துறைப்பூண்டியிலிருந்த பூர்வீக ஓட்டு வீட்டை இடித்துவிட்டு வசதி வந்ததும் சசிகலா பங்களா போல ஸ்ரீ ஜெயந்திநாதர் திருமண அரங்கைக் கட்டியுள்ளார். அந்த வீடு இப்போது யாருடைய கவனிப்பும் இல்லாமல் பாழடைந்து போய் கிடக்கிறதுதான் சோகமான செய்தி. 1995இல் இந்த மண்டபம்தான் ஊரில் நம்பர் 1 ஆக இருந்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக இது செயல்படாமல் பாழடைந்து போய் உள்ளது. இவரது மண்டபத்திற்கு முன்பாக சாலை முனையில் ஒரு பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இதைக் கட்டியது சசிகலாவின் பெற்றோர்கள்தான். அங்கே உள்ள கல்வெட்டில் கிருஷ்ணவேணி விவேகானந்தம் எனப் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறிய கோயில்தான் என்றாலும் அதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது. அது என்ன என்றால்? இந்த வீதி விநாயகர் கோயிலுக்கு ஜெயலலிதா 1992இல் முதல்வராக இருந்த போது ஒரு வெள்ளிக் கலசம் ஒன்றை உபயம் செய்துள்ளார். அதற்கான கல்வெட்டும் காட்சிக்கு உள்ளது. ஆக, முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா இந்த வீட்டுக்கு வந்திருக்கிறார். சிறிய தெருவில் அமைந்துள்ள இந்தக் குட்டி விநாயகர் கோயிலுக்கு அவர் கலசத்தை அளித்துள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனென்றால், இப்போது கூட இந்த வீதி பெரிய அளவு விசாலமாக இல்லை. சிறிய தெரு போன்றுதான் காட்சி அளிக்கிறது. அதில் பல கோடி மதிப்பு மிக்க இந்த கல்யாண மண்டபத்தை சசிகலா கட்டி இருக்கிறார். இன்றைக்குக் கட்டடம் பாழடைந்துபோய் கிடக்கிறது. காவலுக்கு ஒரு வேலை ஆள் கூட இல்லை. உள்ளே உள்ள இருக்கைகள் எல்லாம் உடைந்து போய் கிடக்கின்றன. மணவறையில் சிலந்திகள் கூடு கட்டியுள்ளன. ஒரு காலத்தில் இதிலிருந்து கிடைத்த வருமான சசிகலாவுக்குத் தேவையாக இருந்தது என்றும் இன்றைக்கு அவர் போயஸ் கார்டனில் பங்களா கட்டி வசதி மிக்க கோடீசுவரராக மாறிவிட்டதால் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேவையற்று போய்விட்டது என்றும் ஊர் மக்கள் சொல்கிறார்கள். இதைப் பற்றி Breaking Vlogs என்ற யூடியூப் சேனல் ஒரு தனி காணொளி பதிவை வெளியிட்டுள்ளது. அதில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிவுதான் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. பல கோடி மதிப்பு உள்ள மண்டபம் பாழடைந்துள்ளது என்பதைவிட, சசிகலா பிறந்து வளர்ந்த வீடு இருந்த இடமே இன்று கேட்பாரற்று கிடைக்கிறது என்பதுதான் ஹைலைட் ஆன செய்தியாக இருக்கிறது.

Related Post