சென்னை: பெரிய பணக்கார குடும்ப பின்னணியிலிருந்து சினிமா உலகத்திற்கு வந்தவர் வெங்கட் பிரபு என நினைத்துக் கொண்டிருக்கும் போது தனது கடந்த காலங்களில் எந்தளவு கஷ்டங்களைச் சந்தித்தேன் என்பதைப் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு வெளியான விஜய் 'தி கோட்' பாக்ஸ் ஆப் கலெக்ஷன் பற்றி பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. சிலர் 'லியோ' வசூலை 'கோட்' முறியடித்துவிட்டது என்று சொல்கிறார்கள். திருச்சி ஸ்ரீதர் உள்ளிட்ட சில திரையரங்க உரிமையாளர்கள் இந்த ஆண்டு மிகப் பெரிய வசூல் படம் என்றால் அது 'அசுரன்' தான் என்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் விஜய்யின் 'கோட்' அவரது முந்தைய படத்தைவிட அதிக வசூலைக் கொடுத்துள்ளது. அதேபோல் அடுத்த படத்திற்காக அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால் பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அதில் அரசியல் பஞ்ச் வசனங்கள் கட்டாயம் இருக்கும். அது 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் விஜய்யின் 'கோட்' செய்த வசூலைவிட மலேசியாவில் அதிக வசூல் சாதனை செய்துள்ளதாக அதன் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மலேசியாவில் இவரை வெளியான இந்தியப் படங்களில் அதிக வசூலைச் செய்த முதல் படம் என்ற இடத்தை கோட் எட்டிப்பிடித்திருக்கிறது. இதற்கு முன்னால் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே'தான் இருந்தது. அதை விஜய் படம் முறியடித்துவிட்டது என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு தனது சினிமா வாழ்க்கை அனுபவம் பற்றி மதன் கவுரி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தனது சினிமா வாழ்க்கையில் பல அதிசயங்கள் நடந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது படங்களில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்றும் அதேபோன்று நயன்தாரா அதேபோல் நடித்திருக்கிறார் என்றும் கூறிய வெங்கட், இப்போது தி 'கோட்' படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இந்த வாய்ப்புகள் எல்லாம் பலருக்கும் கிடைக்காதது.
விஜய் மற்றும் அஜித் படங்களில் சிறுவனாக நடித்திருக்கிறேன். அப்போது அவர்களை வைத்து படம் இயக்குவேன் என்று யார் நினைத்திருக்க முடியும்? என்றும் அவர் பேசி இருக்கிறார்.
2007 வெளியான 'சென்னை 28' திரைப்படம் தமிழ் சினிமாவை இவர் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தது. அது வெளியாகி 18 வருடங்களைக் கடந்துவிட்டது. இது ஏற்படுத்திக் கொடுத்த செல்வாக்கை வைத்துத்தான் அஜித்தின் 50ஆவது படமான 'மங்காத்தா'வை இவர் இயக்கினார். இந்தக் கதை முன்பே வேறு வடிவத்திலிருந்ததாகவும் அஜித் ரசிகர்களை திருப்தி செய்வதற்காக அதில் சில மாற்றங்களைச் செய்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தின் ட்ரெய்லர் பெரிய அளவில் ரீச் ஆனது. ஆனால், அது குறித்து ஒரு எதிர்மறையாக கருத்து வெங்கட் பிரபு கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், " என் 'மங்காத்தா' ட்ரெய்லர் முதல் எடிட்டிங் முடித்து அஜித்திடம் காட்டிய போது அது பெரிய அளவில் அவருக்குப் பிடிக்கவில்லை. அதே மாதிரி 'கோட்' ட்ரெய்லரும் விஜய்க்குப் பிடிக்கவில்லை. அப்படி இருந்தும் இந்த இரண்டும் மிகப் பெரிய ஹிட். தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அதை வெளியிட இரண்டு பேருமே சம்மதித்தார்கள். வெற்றிக்குப் பின் போன் செய்து இரண்டு பேருமே நான் எடுத்த முடிவு என சொல்லிப் பாராட்டி இருக்கிறார்கள்.
முதன்முதலாக ஒரு படத்தின் அறிவிப்புக்கு வீடியோ வெளியிடும் பாணியைக் கொண்டுவந்தது நாங்கள்தான். 2010க்கு முன் அப்படி ஒரு வழக்கம் தமிழ்ப் படங்களில் இல்லை. அது 'மங்காத்தா'வில் நடந்தது. மோஷன் போஸ்டர் இப்போது வெளியிடுகிறார்கள். ஆனால், நாங்கள் காட்சிகளை ஷுட் செய்து வெளியிட்டிருந்தோம்" என்று பேசி இருக்கிறார்.
அதுவரை அஜித்தைப் பலரும் அல்டிமேட் ஹீரோவாக பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அவரை வைத்து கிட்டத்தட்ட வில்லன் மாதிரியான தோற்றத்தில் வெங்கட் பிரபு மாற்றிக் காட்டியதால் 'மங்காத்தா' சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்போது வரை அஜித் படங்களில் ஒரு மைல் கல் எனப் பலரும் அதைச் சொல்கின்றனர். இதைப்போலவே சூர்யாவை வைத்து 'மாஸ்' எடுத்தார். இந்தப் படத்தை அதிகம் மெனக்கெட்டுச் செய்தேன். ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்கிறார் வெங்கட்.
இளையராஜா, கங்கை அமரன் எனப் புகழ்பெற்ற பின்புலம் கொண்டிருந்தாலும் இவரது வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் இருந்துள்ளன என்பதை இந்தப் பேட்டியில் மூலம் போட்டு உடைத்துள்ளார். தன் குடும்ப கஷ்டம் பற்றிப் பேசியுள்ள வெங்கட் பிரபு, " "எங்க அப்பா என்னை லண்டனில் படிக்கவைத்தார். நாங்கள் நன்றாக இருந்த குடும்பம். திடீரென்று பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோம். அப்பாவுக்கு வாய்ப்புகள் இல்லை., பிரேம்ஜி தான் அப்போது சம்பாதித்து குடும்பத்திற்கு உதவினான். நான் கீ போர்டு வாசித்து வந்தேன். சம்பாத்தியம் பெரிதாக இல்லை. நானும் பல போராட்டங்களை வாழ்க்கையில் சந்தித்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.