டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான தீர்மானம் இன்று முன்மொழியப்படுகிறது.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில் இதற்கு வழிவகை செய்யும் வகையில், அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா இரண்டை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று ஏற்கெனவே மத்திய அரசு கணித்திருந்தது. எனவே, மசோதாவை கூட்டுக்குழு ஆய்வு அனுப்பவும் தயாராக இருந்தது.
மசோதா என்ன சொல்கிறது?: மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாவில் இரண்டு திருத்தங்கள் முன்மொழியப்பட்டு இருக்கின்றன. முதல் மசோதா, அரசியலமைப்பு சட்டம் 82A-ல் புதியதாக துணைப்பிரிவை சேர்ப்பது. இந்த பிரிவு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஒரே நேரத்தில் நிறைவு செய்ய வழி வகுக்கிறது. அதேபோல அரசியலபை்பு சட்டம் 327-ல் திருத்தம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இரண்டு அவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும்.
இரண்டாவது மசோதா, யூனியன் பிரதேசங்கள், அதாவது ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த யூனியன் பிரதேச சட்டங்களில் திருத்தம் செய்ய வழிவகுக்கிறது.
யார் ஆதரவு? யார் எதிர்ப்பு: இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது வழக்கமாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதேபோல மறுபுறம் தெலுங்கு தேசம் மற்றும் ஷிண்டேவின் சிவசேனா எம்பிக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். மொத்தமாக மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்களும், எதிர்ப்பாக 198 எம்பிக்களும் வாக்களித்திருந்தனர். ஆதரவு அதிகமாக இருந்ததால், மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு: வழக்கமாக மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்வது உண்டு. ஆனால் சில மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்திருக்கின்றன. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் மத்திய அரசு இதற்கு ஒப்புக்கொள்வதில்லை. இப்படி இருக்கையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் மசோதாவை கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப மத்திய அரசு உடனடியாக முன்வந்திருக்கிறது.
ஜேசிபி விவரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் (ஜேசிபி) பிரியங்கா காந்தி உட்பட எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி எம்பிக்கள் 31 பேர் இடம் பெற்றிருக்கின்றனர். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, சுக்தியோ பகத், திமுக சார்பில் டி.எம். செல்வகணபதி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். தவிர சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் எம்பிக்கள் இடம்பெற்றிருக்கின்றனர். பாஜக சார்பில் 10 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு குறித்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.