மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம்மாள் நகரில் உள்ள பல ஏக்கர் நிலம் பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் வருவாய் ஆவணங்களில் தஞ்சை மாநகராட்சி கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிலம் கடந்த 2022ம் ஆண்டு சட்ட விரோதமாக தஞ்சாவூர் மேயரின் மனைவி பெயருக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த பத்மநாபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம்மாள் நகரில் பல ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இடம் தமிழக அரசின் வருவாய் ஆவணங்களில் தஞ்சை மாநகராட்சி கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு தனிநபரின் பெயரில் இந்த இடம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டு பட்டா பெறப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த நிலத்தையும் அதிகாரிகள் மீட்கவில்லை. தற்போது அந்த நிலம் தஞ்சை மாநகராட்சி மேயரின் மனைவி பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டிருக்கிறது.
தற்போதைய தஞ்சை மாநகராட்சி மேயர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறாது என்று கருதுகிறேன். எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும். அதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தஞ்சை மாவட்ட வருவாய் மண்டல அலுவலரை தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.