சிரியாவில் 'மனித படுகொலை கூடம்' அசாத் அரசு கட்டிய சித்ரவதை சிறை.. உள்ளே எப்படி இருக்கு பாருங்க

post-img

வாஷிங்டன்: சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், அந்நாடு தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அசாத்தின் குடும்ப ஆட்சி வீழ்த்தப்பட்ட நிலையில், அந்நாட்டின் தலைநர் டமாஸ்கசில் இருந்த மனித படுகொலை கூடம் என்று சொல்லப்படும் சைத்னயா சிறையில் இருந்த கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளுக்கு நடக்கும் அட்டூழியங்கள் குறித்தும் சிறையில் உள்ளே பாதாள அறை இருந்தது தொடர்பான காட்சிகளும் வீடியோவாக வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் 54 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த பஷார் அல்-அசாத் குடும்ப ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. 14 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்கள் வெற்றி பெற்று சிரியாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், அதிபர் அசாத் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
படுகொலை கூடம்: தற்போது அவர் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். சிரியாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள கிளர்ச்சியாளர்கள், அந்நாட்டில் மனித படுகொலை கூடம் என்று சொல்லப்படும் சையத்னயா (Saydnaya) சிறையை திறந்து பார்த்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்தின் சித்ரவதைக் கூடமாக அறியப்பட்ட இந்த சிறைக்குள் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
பரவும் வீடியோ: சிறைக்குள் உள்ள பாதாள அறையில் பல கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக சித்ரவதை, பட்டினி, புறக்கணிப்பு என பல கொடூரங்களை சந்தித்து வந்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கைதிகளை விடுதலை செய்த போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கிளர்ச்சியாளர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
சிறையில் இருந்து வெளியே வரும் போது சிலர் அச்சப்பட்ட நிலையில், பயப்பட வேண்டாம்.. சிரியாவில் ஆசாத்தின் அடக்குமுறை ஆட்சிகாலம் முடிந்து விட்டதாக கிளர்ச்சியாளர்கள் அவர்களிடம் கூறுகிறார்கள். சிரியாவில் ஆசாத்தின் கொடூர ஆட்சியை வெளிக்காட்டும் விதமாக இந்த சிறை அமைந்து இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
இறந்த பிறகே தகவல்: இந்த சிறைக்குள் அடைக்கப்பட்டால், பெரும்பாலும் இறந்த பிறகு மட்டுமே உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், சக கைதிகளை தாக்குமாறு சிறை நிர்வாகமே கட்டாயப்படுத்தும் எனவும் தற்போது வெளியே வந்தவர்கள் கூறியுள்ளனர். சையத்னயா சிறையானது டமாஸ்கசில் உள்ளது. அரசியல் கைதிகள், எதிர்ப்பாளர்களை இந்த சிறையில் அஷாத் அரசு அடைத்து வந்துள்ளது.
30 ஆயிரம் கைதிகள்: இந்த சிறையை மனித படுகொலை கூடம் என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கடந்த 2017 ஆம் ஆண்டு கூறியது. இந்த சிறையில் கைதிகள் பெரிய அளவில் மரண தண்டனைக்கு உள்ளாக்குவது மற்றும் சித்ரவதை செய்தல் ஆகியவை அதிகம் நடைபெற்று வந்துள்ளது. 2011-2018 ஆண்டு கால கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் இந்த சிறையில் இருந்து சித்ரவதை மற்றும் பட்டினி போடப்பட்டு இருக்கிறார்கள். அல்லது மரண தண்டனையை பெற்றதாக சொல்லப்படுகிறது.
சிறைக்கு உள்ளேயே தகன மேடை: தூக்கிலிடும் கைதிகளை தகனம் செய்வதற்காக 2017-ஆம் ஆண்டு தகன மேடையும் சிறைக்குள் கட்டப்பட்டு இருக்கிறது. சிறைக்குள் கைக்குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் அடைபட்டு இருந்துள்ளனர்.
இந்த சிறையின் கதவுகளை உடைத்து உள்ளே அடைபட்டு இருந்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. விடுவிக்கப்பட்ட கைதிகள் தங்கள் குடும்பத்தினரை பார்த்ததும் ஆனந்தம் அடைந்து கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

Related Post