அண்ணாமலை நடத்திய மிக முக்கிய மீட்டிங்.. திடீரென பாஜக அலுவலகத்திற்கு வந்த நடிகை கஸ்தூரி.. பரபர!

post-img
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று பாஜக மாநிலத் தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி. கஸ்தூரி இன்று பாஜக தலைமை அலுவலகம் சென்றதால், அவர் பாஜகவில் இணையப் போகிறாரா என்கிற பரபரப்பு எழுந்தது. ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கஸ்தூரி, சமீப காலமாக அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிரடியான அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வரும், கஸ்தூரி தொலைக்காட்சி அரசியல் விவாதங்களிலும் பங்கேற்று அனல் பறக்க பேசி வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஒரு கூட்டத்தில் கஸ்தூரி பேசிய பேச்சு அவரை புழல் சிறைக்கு அனுப்பியது. ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி, தீவிரமாக திமுகவுக்கு எதிராக கருத்துகளைப் பேசி வருகிறார். இந்தச் சூழலில் தான் இன்று திடீரென சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் சென்றுள்ளார் கஸ்தூரி. பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அண்ணாமலை தலைமையில் நடந்த கூட்டத்தில், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ எச் ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த சமயத்தில் தான் பாஜக அலுவலகத்துக்குச் சென்றுள்ளார் கஸ்தூரி. பாஜக அலுவலகம் சென்ற கஸ்தூரி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஸ்தூரி பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன. ஆனால், கஸ்தூரி இதுவரை அதனை தெளிவுபடுத்தவில்லை. திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் கஸ்தூரி, லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது லோக்சபா தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார். நடிகை கஸ்தூரியிடம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. திமுக வலுவாக இருக்கிறது என்பதை விட திமுகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் வலிமையாக இல்லை என்பதுதான் உண்மை. எனவே இந்த தேர்தலில் திமுக தோற்காது எனக் கூறியிருந்தார். அடுத்த சில நாட்களிலேயே சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமியை சந்தித்து பேசினார் கஸ்தூரி. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணையுமா என்றெல்லாம் பரபரப்பு விவாதங்கள் நடைபெற்று வந்த அந்த நேரத்தில் திடீரென எடப்பாடி பழனிசாமியை கஸ்தூரி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. ஆனால், ட்விஸ்ட்டாக, லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் கஸ்தூரி. மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கஸ்தூரி. ஆனால், பாஜக மதுரை உட்பட தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் தான் அண்மையில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார் கஸ்தூரி. நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இது குறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கஸ்தூரி தலைமறைவானார். இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தேடிவந்தனர். கடந்த 17 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.‌ புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, 21 ஆம் தேதி புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கஸ்தூரி. சிறையில் இருந்து வந்தபிறகு திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் கஸ்தூரி, நடிகர் விஜய் கூறியது போல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாமல் மைனஸில் சென்றால் அவரது வாய்க்கு சர்க்கரை போடுவேன். இதற்கே அவருக்கு ஆதரவு தரவேண்டும். திமுகவை வீழ்த்த, அதிமுக, பாஜக, விஜய்யின் தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post