விழுப்புரம்: வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சகதி வீசியதாக பாஜக பிரமுகர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு குறித்து பொலீசார் தீவிர விசாரணையை தொடங்க இருக்கின்றனர்.
வங்கக்கடலில் உருவாகியிருந்த ஃபெஞ்சல் புயல் கடந்த 1ம் தேதி மரக்காணம் அருகே கரையை கடந்தது. வழக்கமாக புயல் கரையை கடக்கும் பகுதியில் கனமழை பெய்யும். ஆனால் கரையை கடந்துவிட்டால் வலுவிழந்துவிட்டு, வேகமாக நகர்ந்து சென்றுவிடும். ஆனால், ஃபெஞ்சல் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. புயல் கரையை கடந்த பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருந்தது. ஆயினும் நகரும் வேகமாக குறைந்ததால் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையை கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாக இம்மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பாக சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் வெள்ள பாதிப்புகளுக்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் உரிய நேரத்தில் நீர் வெளியேற்றப்படவில்லை எனில், அணை முழுவதுதுமாக உடைந்து பெரும் பேரிடர் ஏற்பட்டிருக்கும். மறுபுறம் தென்பெண்ணை மற்றும் மலட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் குடியிருப்புகள் நீரில் மூழ்கின.
வெள்ளம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன. தென்மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் வந்து சேர வேண்டிய ரயில்கள் காட்பாடி, அரக்கோணம் வழியாக எழும்பூர் வந்தடைந்தது. இப்படி இருக்கையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், மீட்பு பணிகளை வேகப்படுத்தவும் அமைச்சர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வை மேற்கொண்டிருந்தார். கடந்த டிச.3ம் தேதி விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ள பாதிப்புகளை பொன்முடி ஆய்வு செய்திருந்தார். அப்போது திடீரென அவர் மீது சகதி வாரி வீசப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பாஜக பிரமுகர் உட்பட 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்தை ராமர் என்கிற ராமகிருஷ்ணனும், பாஜக பெண் பிரமுகர் விஜய ராணி ஆகியோரும்தான் அமைச்சர் பொன்முடி மீதும் அவருடன் இருந்த கௌதம் சிகாமணி எம்பி மீதும் சகதியை வீசியுள்ளனர்.
இதனையடுத்து இரண்டுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது. சொந்த மாவட்டத்தில் அமைச்சர் மீது சகதி வீசப்பட்டுள்ள சம்பவம் அரசியல் தளத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage