டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக வழக்கு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

post-img

சென்னை: பல டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவது பல கடைகளில் தொடர்கிறது.. அரசு இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் தீர்வுகள் தான் இல்லை.. இந்நிலையில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4,829 மதுக் கடைகள் டாஸ்மாக் மூலம் இயங்கி வருகின்றன. மது விற்பனையை நவீனப்படுத்தும் வகையில், 'எண்ட் டூ எண்ட்' என்ற புதிய திட்டம் ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மது பாட்டில்கள் தொழிற்சாலையில் உற்பத்தியாவது முதல் கடைகளில் விற்பனையாவது வரை அனைத்து நகர்வுகளையும் டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிக்க முடியும்.

இந்த திட்டம் ராமநாதபுரம், அரக்கோணம், காஞ்சீபுரம் (வடக்கு), காஞ்சீபுரம் (தெற்கு), கரூர், சிவகங்கை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. இங்குள்ள மதுக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளரிடம் செல்போன் வடிவிலான 'ஸ்கேனர்' கருவியும், சிறிய வடிவிலான 'பில்' போடும் கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 கருவிகளும் 'புளூடூத்' மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய முறையால், நீண்ட பல காலமாக இருந்துவரும், மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுதை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மது விற்பனை நவீனப் படுத்தப்பட்டுள்ள 6 வருவாய் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் இதே குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 ரூபாய் அதிகம் வாங்காத மதுக்கடைகளில் விரல் விட்டுத்தான் எண்ண வேண்டும் என்று டாஸ்மாக் மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்நிலையில் சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "கடந்த 2021-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி லிட்டர் குவார்ட்டர் மது பாட்டில் வாங்கினேன். சில கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10-ம், மேலும் சில கடைகளில் கூடுதலாக ரூ.20-ம் வாங்கினர். இதேபோன்று 'ஆப், புல்’ போன்ற மதுபாட்டில்களுக்கு என கூடுதலாக ரூ.70 வரை வாங்கப்படுகிறது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை பட்டியல் இல்லை. அதேபோன்று, மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ரசீது வழங்கப்படுவது இல்லை. மதுபாட்டில்களுக்கு அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சேவை குறைபாடு ஆகும். எனவே, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.
ரூ.60 ஆயிரம் இழப்பீடு
இதேபோன்று கொடுங்கையூர், ஓட்டேரி, குமரன்நகர், பெரவள்ளூர், கொளத்தூர், கொசப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக மேலும் 9 வழக்குகள் தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணை முடிவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், 'கூடுதல் கட்டணம் வசூலிப்பது என்பது நியாயமற்ற வர்த்தகம் ஆகும். எனவே, கூடுதலாக வசூலித்த பணத்தை மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும். சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக ஒரு வழக்கிற்கு ரூ.5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.1,000 என மொத்தம் 10 வழக்குகளுக்கு ரூ.60 ஆயிரத்தை டாஸ்மாக் சூப்பர்வைசர் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

Related Post