சென்னை: பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட ஐடி பொறியாளர் அதுல் சுபாஷின் சகோதரர் நீதிபதி ஒருவர் மீது கடுமையான புகார்களை வைத்துள்ளார். சுபாஷின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி மீது அதுல் சுபாஷின் சகோதரர் புகார்களை வைத்துள்ளார்.
மனைவியின் தொல்லை, விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டங்களால் பெங்களூரை சேர்ந்த 34 வயது ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. சட்டம் எந்த வகையிலும் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை என்று கூறி தற்கொலை செய்துள்ளார்.
கடந்த திங்களன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷ், 24 பக்க தற்கொலைக் குறிப்பை எழுதி உள்ளார். அதேபோல் கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் அவர் தனது மனைவி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். தனது மனைவி நிகிதா சிங்கானியா மீது கடுமையான புகார்களை வைத்துள்ளார்.
நீதிபதி மீது புகார்: பெங்களூரில் பணியாற்றிய பீகாரைச் சேர்ந்த அதுல் சுபாஷின் விவாகரத்து வழக்கில் உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் நடந்து வந்தது. அந்த பெண் நீதிபதி தன்னிடம் 4-5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதாவது பராமரிப்பு தொகையை 40 ஆயிரமாக குறைக்க 4-5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதை கொடுக்கவில்லை என்றதும் 2 லட்சம் ரூபாய் பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டதாக தற்கொலை கடிதத்தில், வீடியோவில் சுபாஷ் குறிப்பிட்டுள்ளார்
அசேஞ்சர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து கைநிறைய வருமானம் ஈட்டும் தனது மனைவி.. தன்னிடம் விவாகரத்திற்கு பின் 4 லட்சம் ரூபாய் பராமரிப்பு கேட்டார். எனது உறவினர்கள் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் பொய் வழக்குகளைப் பதிவு செய்தார். எங்களின் நான்கு வயது மகனுக்கும் பராமரிப்புத் தொகையாக மாதம் ₹ 2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
ஜீவனாம்சத்திற்கு காசு இல்லை: சுபாஷின் சகோதரர் பிகாஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "எனது சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆண்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் இந்த நாட்டில் ஒரு சட்ட நடைமுறை வேண்டும். இது தொடர்ந்தால், நிலைமை மோசமாகும். முக்கியமாக நீதிபதிகள் இருக்கையில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள். என் சகோதரர்.. விவாகரத்து வழக்கின் போது... என்னால் ஜீவனாம்சம் இதற்கு மேல் கொடுக்க முடியாது. நான் முடிந்த அளவு கொடுத்துவிட்டேன். இதற்கு மேல் கேட்டால் நான் தற்கொலைதான் செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதை கேட்டு அவரின் முன்னாள் மனைவி மற்றும் நீதிபதி சிரித்தனர். இப்படி இருந்தால் எப்படி ஆண்களுக்கு நீதி கிடைக்கும்? என் சகோதரர் அழுதபடி பேசியும் கூட சிரிக்கும் அளவிற்குத்தான் நிலைமை இருக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி இவர்களுக்கு நீதி கிடைக்கும். நமது சட்டங்களில் மாற்றங்களை செய்ய வேண்டும். பெண்களுக்கு கிடைக்கும் அதே நீதி எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.