வாடகை வீட்டுதாரர்களின் நிலுவை பாக்கி.. வீட்டு வாடகை ஆணையம்.. ஹவுஸ் ஓனர்களுக்கு வந்த திடீர் சந்தேகம்?

post-img
சென்னை: குடியிருப்போர் செலுத்த வேண்டிய அனைத்து வகை கட்டண பாக்கிகளையும் வசூலித்து தரும் வகையில் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் அவசியம் என்றும், இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என்றும் கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது. தமிழகத்தில் வாடகை மற்றும் குத்தகை கட்டுப்பாட்டு சட்டத்துக்கு மாறாக நில உரிமையாளர்கள் வாடகைதாரர் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும் புதிய சட்டம் 2017ல் நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டு, வாடகை ஆணையம் அமைக்கும் பணிகளை முடுக்கிவிடும்படி கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. வாடகை ஆணையம்: அந்தவகையில், முதல் வாடகை ஆணையம் சென்னையில் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் வாடகை ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கும் வந்திருக்கிறது. வீடு மனை மற்றும் அலுவலகங்களை வாடகைக்கு விடுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க 32 மாவட்டங்களிலும் இந்த வாடகை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.. இதற்காகவே, ஆணையத்திற்கு வரும் புகார்களை விசாரிக்க வருவாய் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கோட்டாட்சியர்கள்: வாடகை ஆணையத்திற்கு வரும் புகார்களை விசாரிக்கும் அலுவலர்களாக வருவாய் கோட்டாட்சியர்கள் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வழக்கமான துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன் வாடகை தொடர்பான புகார்களை, அதாவது, வீட்டு வாடகை கொடுக்காமல் இருப்பது, காலி செய்ய மறுப்பது போன்ற புகார்களை, விசாரிக்கிறார்கள்.. பொதுமக்கள் வாடகை ஒப்பந்த பதிவு உள்ளிட்ட பணிகளை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள www.tenancy.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. திடீர் புகார்: இந்த வழக்குகளில், வாடகை பாக்கியை உரிமையாளர்களுக்கு செலுத்த ஆணையம் உத்தரவிடுகிறது.. ஆனால், சம்பந்தப்பட்ட வாடகைதாரர், பல வருடங்களாகவே நிலுவை வைத்துள்ள மின்சார கட்டணம், பராமரிப்பு கட்டணங்களை வசூலிக்க, ஆணையம் உத்தரவிடுவதில்லை என்று புகார் ஒன்று கிளம்பியிருக்கிறது. இது குறித்து, சென்னை பெரம்பூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பி.கல்யாணசுந்தரம், பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "வாடகை வீட்டுவசதி சட்ட விதிகளின்படி, வாடகைதாரரிடம் இருந்து, அனைத்து நிலுவை தொகையும் வீட்டு உரிமையாளருக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வாடகை என்ற தலைப்பிலேயே மின்சாரம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் சேர்த்து பார்க்கப்படுகின்றன. கூடுதல் அதிகாரம்: ஆனால், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள், வாடகை நிலுவையை வசூலிப்பதற்கு மட்டுமே உத்தரவிட்டுவிட்டு, மின்சார கட்டணம், பராமரிப்பு கட்டண நிலுவையை வசூலிப்பதற்கு, போலீசாரை அணுகுமாறு அறிவுரை வழங்குகிறார்கள். இதனால், வாடகை ஆணைய உத்தரவுக்கு பிறகு, வீட்டு உரிமையாளர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. எனவே, குடியிருப்போர் செலுத்த வேண்டிய அனைத்து வகை கட்டண பாக்கிகளையும் வசூலித்து தரும் வகையில் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் அவசியம். இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post